/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4வது மண்டல அலுவலக கட்டடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
/
4வது மண்டல அலுவலக கட்டடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
4வது மண்டல அலுவலக கட்டடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
4வது மண்டல அலுவலக கட்டடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
ADDED : ஜன 21, 2024 01:00 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டல அலுவலக புதிய கட்டடம், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முழுமையாக இந்த வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டலம், 15 வார்டுகளை உள்ளடக்கியது. மாநகராட்சியாக தரம் உயர்த்தி, மண்டலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், முதல் மற்றும் மூன்றாவது மண்டலங்கள் வேலம்பாளையம் மற்றும் நல்லுார் நகராட்சிகள் இயங்கி வந்த அதே கட்டடத்தில் செயல்பட துவங்கியது.
ஆண்டிபாளையம், முருகம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைத்த, 4வது மண்டலமும், தொட்டிபாளையம், செட்டிபாளையம் ஊராட்சிகளை இணைத்த, 2வது மண்டலத்துக்கும் நிர்வாக ரீதியான அலுவலகம் செயல்பட வசதியில்லை.
இதனால், அங்கிருந்த ஊராட்சி அலுவலகங்கள், பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு பகுதிகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின் நஞ்சப்பா நகரில், 2வது மண்டலத்துக்கு கட்டடம் இரண்டாண்டுகளுக்கு முன் கட்டி முடித்து தற்போது இயங்கி வருகிறது.
நான்காவது மண்டலம், ஆண்டிபாளையம், முருகம்பாளையம் பகுதியில் இரு பிரிவாக இயங்கி வந்தது. இதற்கு மண்டல அலுவலகம் கட்ட இடம் தேர்வு நடந்தது.
ஆண்டிபாளையத்தில் உள்ள கோவில் நிலம் தேர்வு செய்யப்பட்ட போது, பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால், 2011ம் ஆண்டு துவங்கிய மண்டல அலுவலகம் அமைக்கும் பணி இழுபறியானது.
வேறு வழியின்றி, முருகம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் இடித்து அகற்றி, அங்கு புது கட்டடம் கட்ட முடிவானது. அங்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணியை, 2021ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
கட்டடம் அமையும் இடத்தில் பாறை இருந்த நிலையில், கட்டுமானப் பணி மேலும் இழுபறியாக மாறியது. ஒரு வழியாக கடந்த, 5ம் தேதி, தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் திறந்து வைத்தும் முழுமையாக இந்த வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
புதிய வளாகத்தில் பொறியியல் பிரிவினர் தற்போது பணியாற்றி வருகின்றனர். நிர்வாகம், வருவாய் பிரிவு உள்ளிட்ட பிற பிரிவுகள் இடமாற்றம் செய்யும் பணி நடக்கிறது.
நெட்வொர்க் இணைப்புகள் வழங்கும் பணியும், அதற்கான கேபிள்கள், சர்வர் அமைப்பு ஆகியன அமைக்கும் பணியும் நடக்கிறது. இரண்டொரு நாளில் இப்பணிகள் முடிந்து முழுமையான பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

