
திருப்பூர்;குடியிருப்பு பகுதி வழியாக பிரதான கால்வாய் உள்ள நிலையில் மேலும் ஒரு கால்வாய் கட்டும் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என, கவுன்சிலர் தலைமையில் திரண்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு கவுன்சிலர் (அ.தி.மு.க.,) தமிழ்ச்செல்வி தலைமையில், வார்டு பகுதி மக்கள் நேற்று மாநகராட்சி மேயர், கமிஷனர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆகியோரிடம் அளித்த மனு:மாநகராட்சியின் பிரதான பகுதியான வளையன்காடு, எஸ்.ஏ.பி., தியேட்டர், இ.பி., காலனி, காந்தி நகர், பெரியார் காலனி, அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பெரிய அளவிலான மழை நீர் வடிகால் உள்ளது.
இப்பகுதியில் சேகரமாகும், மழைநீர் மற்றும் கழிவுநீர் ஆகியன எங்கள் வார்டுக்கு உட்பட்ட கவிதா நகர், வ.உ.சி., நகர், ஸ்ரீ நகர், ஜெ.ஜெ. நகர், சொர்ணபுரி கார்டன் வழியாகக் கடந்து செல்கிறது.மழை நாட்களில் அதிகளவில் வரும் நீரால் இப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது புதிதாக மேலும் ஒரு வடிகால் இப்பகுதி வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், பாதிப்பு மேலும் அதிகரிக்கும். இதற்கு மாற்று வழியாக வேறு பாதையில் இந்த புதிய கால்வாயை அமைக்க வேண்டும். இதற்கான புதிய வழித்தடம் குறித்தும் விரிவான பட விளக்கமும் சமர்ப்பிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

