/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்த இடங்களில் பூங்கா அமையுமா? ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும் நகராட்சி அலட்சியம்
/
நகர குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்த இடங்களில் பூங்கா அமையுமா? ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும் நகராட்சி அலட்சியம்
நகர குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்த இடங்களில் பூங்கா அமையுமா? ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும் நகராட்சி அலட்சியம்
நகர குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்த இடங்களில் பூங்கா அமையுமா? ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும் நகராட்சி அலட்சியம்
ADDED : ஜூன் 24, 2025 10:24 PM

உடுமலை; நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் புதிதாக பூங்கா அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது; ஏற்கனவே உள்ள பூங்காக்கள் பராமரிப்பிலும், நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதால், அவை மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகின்றன.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட, 33 வார்டுகளில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. புதிய வீட்டு மனைகள் அமைக்கும் போது, பொது உபயோகம், ரோடு, மைதானம், பூங்கா, திறவிடம் ஆகிய பயன்பாடுகளுக்கு நிலம் ஒதுக்கப்படுகிறது.
வீட்டு மனை அங்கீகாரம் வழங்கும் போது, நகராட்சி வசம் பொது ஒதுக்கீடு இடம் ஒப்படைக்காதது மற்றும் ஒப்படைத்த நிலங்களையும் முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்களினால், பெரும்பாலான நிலங்கள் மாயமாகி வருகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக சில ஆண்டுகளுக்கு முன், குடியிருப்புகளில் பூங்காவுக்கான இடங்களை கண்டறிந்து அங்கு கம்பி வேலி மற்றும் தகவல் பலகை அமைக்கும் பணி, நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 33 வார்டுகளிலும், 55 பூங்காக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்விடங்களிலும் மக்கள் பயன்படுத்தும் பூங்கா இல்லாமல் பெரும்பாலான இடங்கள் புதர் மண்டி பரிதாப நிலையில் உள்ளது; ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது.
பூங்கா இடங்களை பாதுகாக்க மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், வேலன் நகர், சிங்கப்பூர் நகர், அண்ணா குடியிருப்பு, வாசவி நகர் விரிவு, ருத்ரவேணி லே-அவுட், சந்தோஷ்நகர், சந்த்ரோதயா கார்டன், ஸ்டேட் பாங்க் காலனி, வாசவி நகர், எம்.பி., நகர், அனுஷம் நகர், டி.ஆர்.என்.,கார்டன், ஆர்.கே., லே- அவுட் என, 13 இடங்களில், பூங்கா அமைத்தல், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் என ஒவ்வொரு பூங்காவிற்கும், தலா, ரூ. 10 லட்சம் வீதம், 1.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகத்தினர் பணிகளை மேற்கொண்டனர்.
நடவடிக்கை இல்லை
இந்த பூங்காக்களும் போதிய பராமரிப்பு இல்லாமல், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
அதே போல், நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், நகராட்சிக்கு சொந்தமான, ஜி.டி.வி., நகர், சாத்விக் நகர், ராஜலட்சுமி நகர் பகுதியிலுள்ள பூங்காக்கள், 1.42 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, கூடுதலாக சிறுவர் விளையாட்டு சாதனங்களுடன் சிறுவர் பூங்கா அமைக்க பணிகள் துவங்கின.
இப்பணிகளும் பாதியில் கைவிடப்பட்டுள்ளது. புதிதாக பூங்கா அமைக்கும் திட்டமும் கண்டுகொள்ளப்படவில்லை.
நகராட்சி பகுதியிலுள்ள அனைத்து பூங்கா நிலங்கள் குறித்து, விரிவான ஆய்வு செய்து அவற்றை மீட்க வேண்டும். தற்போது, நகராட்சி வசம் உள்ள பூங்காக்களை, புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவும், பராமரிப்பு பணிக்கு, தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.
அதே போல்,விளையாட்டு மைதானம், பொது உபயோக இடங்களை மீட்டு, மக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றவும், நகராட்சி நிர்வாகத்தினர் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், நகராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், நகர மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.