/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் பூக்கடைகள் அமைக்கும் பணி நிறுத்தம்
/
விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் பூக்கடைகள் அமைக்கும் பணி நிறுத்தம்
விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் பூக்கடைகள் அமைக்கும் பணி நிறுத்தம்
விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் பூக்கடைகள் அமைக்கும் பணி நிறுத்தம்
ADDED : ஜன 24, 2024 01:30 AM

திருப்பூர்;திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் இயங்கி வந்த பூ மார்க்கெட் வளாகம், இடமாற்றம் செய்யப்பட்டு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புதிய மார்க்கெட் வளாகம் கட்டப்பட்டது.
கட்டுமான பணி துவங்கியதில், பல்லடம் ரோட்டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்துக்கு தற்காலிகமாக கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய பூ மார்க்கெட் வளாகம் கட்டுமானப் பணி நிறைவடைந்த பின், அதற்கான ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. ஒரு வழியாக ஏலம் முடிந்து வளாகம் திறக்கப்பட்டது. அதன்பின் பலரும் தங்கள் கடைகளை இடமாற்றம் செய்தனர்.
ஒரு சில வியாபாரிகள், இட மாற மறுத்து தொடர்ந்து அதே வளாகத்தில் வியாபாரம் நடத்தினர். கடைகளை காலி செய்ய மறுத்த நிலையில், பிரச்னை கோர்ட் வழக்கு வரை சென்றது. இதில் கோர்ட் உத்தரவிட்டதால், மாநகராட்சி நிர்வாகம் அங்கிருந்த கடைகளை காலி செய்தது.
இதனால், சில வியாபாரிகள், பல்லடம் ரோட்டில் தனியார் இடம் ஒன்றில் பூக்கடைகள் அமைக்கப்பட்டது. ஒரே மின் இணைப்பை ஏராளமான கடைகள் பயன்படுத்திய நிலையில், மின் வாரியம் இட உரிமையாளருக்கு கடும் அபராதம் விதித்து, துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால், நில உரிமையாளர் கடைகளை காலி செய்யுமாறு கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால், புஷ்பா சந்திப்பு பகுதியில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு சொந்தமான வளாகம் தேர்வு செய்யப்பட்டு, கடைகள் கட்டும் பணி முழு வீச்சில் நடந்தது. இந்நிலையில், அங்கு நடைபெறும் கட்டுமானப் பணி நேற்று திடீரென நிறுத்தப்பட்டது.
பணி நிறுத்தம் ஏன்?
திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிறிய அளவிலான கடைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டு, வேளாண் விளை பொருள் சந்தை வளாகம் இயங்கி வருகிறது. சமீபத்தில், அண்மையில் சத்தி பகுதியை சேர்ந்த பூ உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் விற்பனை செய்யும் வகையில் கடைகள் அமைக்க நிர்வாகத்தை அணுகி அனுமதி கேட்டுள்ளனர்.
அவ்வகையில், ஏழு பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகள் போர்வையில், சில வியாபாரிகள் கடை அமைக்க முயற்சித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள், சிலர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதனால், நேற்று கடைகள் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.

