/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கிரிவலம் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து வழிப்பறி
/
கிரிவலம் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து வழிப்பறி
ADDED : ஜன 23, 2024 12:40 AM
திருவண்ணாமலை : திருவண்ணாமலையிலுள்ள மலையையே, சிவனாக பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்புக்காக, கிரிவலப்பாதையில், 2 கி.மீ.,க்கு ஒரு போலீசார் என, 14 கி.மீ.,க்கும், 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் உள்ளனர்.
மேலும், கிரிவல பக்தர்கள் பாதுகாப்புக்காகவே, திருவண்ணாமலை மேற்கு போலீஸ் ஸ்டேஷன் புதிதாக திறக்கப்பட்டது. இவ்வளவு பாதுகாப்பு இருந்தும், கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் நகை, பணம் வழிப்பறி சம்பவம் தொடர்கிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆந்திர மாநிலம், காக்கிநாடாவை சேர்ந்த சாந்தி, 40, என்ற பெண் கிரிவலம் சென்றார். சிங்கமுக தீர்த்தம் அருகே, பைக்கில் வந்த இரு வாலிபர்கள், அவரை வழிமறித்து, அவர் அணிந்திருந்த, 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இது குறித்து, திருவண்ணாமலை மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

