/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
முதல்வரின் பேனாவை பரிசாக பெற்ற அரசுப்பள்ளி மாணவி
/
முதல்வரின் பேனாவை பரிசாக பெற்ற அரசுப்பள்ளி மாணவி
ADDED : ஜூன் 17, 2025 01:17 AM

திருச்சி; திருச்சி ஆதிதிராவிடர் நல அரசு பள்ளியில் பயின்று, 'க்ளாட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ராகினிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் பேனாவை பரிசளித்து வாழ்த்தினார்.
திருச்சி பெரியமிளகுபாறையில் அரசினர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த ராகினி என்ற மாணவி, 'நான் முதல்வன்' திட்டத்தில் படித்து, தேசிய சட்டப்பள்ளிகளில் தேர்வுக்காக, அகில இந்திய அளவிலான க்ளாட் எனும் பொது சட்டப்படிப்பு சேர்க்கைக்காக, தேர்வில் வெற்றி பெற்று, ஜபல்பூரில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் படிக்க தேர்வாகி உள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம், தஞ்சையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், பெரியமிளகுபாறையில் உள்ள மறைந்த கட்சி நிர்வாகி தங்கராசு வீட்டுக்கு சென்றார். செல்லும் வழியில், பள்ளி வாசல் முன் மாணவி ராகினியை நேரில் அழைத்து, அவருக்கு சால்வை அணிவித்து, தன் பாக்கெட்டில் இருந்த பேனாவை பரிசாக வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
முதல்வரின் இந்த நடவடிக்கையால், ராகினியின் பெற்றோர், குடும்பத்தார், ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கட்சியினர் நெகிழ்ந்து போயினர்.