/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடூர் அணையில் படகு சவாரிக்கு மக்கள் எதிர்பார்ப்பு: சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்குமா?
/
வீடூர் அணையில் படகு சவாரிக்கு மக்கள் எதிர்பார்ப்பு: சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்குமா?
வீடூர் அணையில் படகு சவாரிக்கு மக்கள் எதிர்பார்ப்பு: சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்குமா?
வீடூர் அணையில் படகு சவாரிக்கு மக்கள் எதிர்பார்ப்பு: சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்குமா?
ADDED : ஜன 19, 2024 07:37 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டத்தில் வீடூர் அணையில் படகு சவாரி விட சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டிவனம் தாலுகாவில் வீடூர் அணை அமைந்துள்ளது. கடந்த 1959ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் விவசாயிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
1920 ஏக்கர் பரப்பளவு நீர் பிடிப்பு கொண்ட இந்த அணையின் கொள்ளவு 32 அடி (605 மில்லியன் கன அடி) ஆகும். அணையின் மூலம் தமிழ்நாட்டில் 2200 ஏக்கர் விவசாய நிலமும், புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது.
வருடத்தில் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை 135 நாட்கள் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தண்ணீர் நிரம்பியுள்ள போது வார இறுதி நாட்களில் அணையின் அழகைக் காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் காணும் பொங்கலையொட்டி அணைக்கு 15 ஆயிரம் பேர் வந்து சென்றுள்ளனர்.
அணையில் சிறுவர்கள், பெரியவர்கள் என பொழுது போக்கிற்காக அணையின் முகப்பு பகுதியிலும், அணையில் தண்ணீர் திறக்கும் பகுதியின் அருகிலும் பூங்கா வசதி மட்டுமே உள்ளது. நீர் பிடிப்பு உள்ள நேரத்தில் அணையில் யாரும் குளிக்க அனுமதியில்லை.
பொது மக்கள் மகிழ்வுடன் பொழுது போக்க சுற்றுலா துறையின் மூலம் அணையில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது படகு சவாரி செய்ய பொதுமக்கள் புதுச்சேரி மாநிலத்தில் ஊசுட்டேரிக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட சுற்றுலாத் துறையின் மூலம் அணையில் உள்ள பூங்காவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
அத்துடன் கூடுதல் வசதியாக சுற்றுலாத் துறை அணையில் படகு சவாரி ஏற்படுத்தினால் பொதுமக்கள் மகிழ்வுடன் வந்து செல்லவும் , அப்பகுதியில் வசிக்கும் அடிதட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவும் பயன்படும்.
எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், கலெக்டர், மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தான் ஆகியோர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று படகு சவாரி வசதி ஏற்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

