/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணி மாற்று சாலையில் போக்குவரத்து திருப்பி விட முடிவு வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
/
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணி மாற்று சாலையில் போக்குவரத்து திருப்பி விட முடிவு வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணி மாற்று சாலையில் போக்குவரத்து திருப்பி விட முடிவு வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணி மாற்று சாலையில் போக்குவரத்து திருப்பி விட முடிவு வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
ADDED : ஜன 10, 2024 01:27 AM

விழுப்புரம் : விழுப்புரம் - நாகப்பட்டினம் புதிய நான்கு வழிச்சாலை திட்டத்தில், கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணி நடப்பதால் அங்கு வரும் 18ம் தேதி முதல் தற்காலிகமாக சாலை மூடப்பட்டு, போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் புதிய நான்கு வழிச்சாலை திட்டத்தில், முதல் கட்டமாக விழுப்புரம் - புதுச்சேரி எம்.என்.குப்பம் வரை, சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில், கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணி மட்டும் முடிக்கப்படாமல் உள்ளது.
இதற்காக ரயில்வே துறையின் அனுமதி பெற்று, கடந்த மாதம் முதல் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. முதலில், கண்டமங்கலம் ரயில்வே பாலத்தின் இடதுபுறமாக செல்லும் சின்னபாபுசமுத்திரம் சாலை மட்டும் தற்காலிகமாக மூடப்பட்டு, ரயில்வே இணைப்பு பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, மெயின் பாலத்தில் 'கர்டர்கள்' அமைத்து, கான்கிரீட் பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதனால், தற்போது, குறுகிய நிலையில் உள்ள கண்டமங்கலம் ரயில்வே பாலத்தின் வழியாகச் செல்லும், விழுப்புரம் - புதுச்சேரி மார்க்க பிரதான சாலை தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இதனால், வரும் 18ம் தேதி முதல், கண்டமங்கலம் ரயில்வே பாலத்தின் கட்டுமானப் பணிக்காக, தற்போது அங்கு மேம்பாலம் அருகே பயன்படுத்தப்பட்டு வரும் விழுப்புரம் - புதுச்சேரி மார்க்க சர்வீஸ் சாலை தற்காலிகமாக மூட திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, நகாய் திட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, ஒப்பந்த நிறுவனம், போலீசார் தரப்பில் ஆலோசித்து முடிவெடுத்துள்ளனர். அதற்கான முறையான அறிவிப்பு, இன்று 10ம் தேதி வெளியாகும் என்றனர்.
மாற்று சாலை
கண்டமங்கலத்தில் இந்த சாலை மூடப்பட்டால், விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள், திருவண்டார்கோவிலில் இடதுபுறம் திரும்பி, கொத்தம்புரிநத்தம், வனத்தம்பாளையம், சின்னபாபுசமுத்திரம், பங்கூர் வழியாக புதுச்சேரி சாலைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அதே போல், புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்கள், அரியூரில், சிவராந்தகம் சாலையில் இடதுபுறமாக திரும்பி மிட்டாமண்டகப்பட்டு, திருபுவனைவழியாக விழுப்புரம் சாலையை அடைந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

