ADDED : ஜூன் 26, 2025 11:40 PM

மயிலம்: மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் பால சித்தர் குருபூஜை, நுால் வெளியீடு மற்றும் விருது வழங்கல் என முப்பெரும் விழா நடந்தது
மயிலம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலசித்தர் ஜீவசமாதியான இடத்தில் ஆனி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று குருபூஜை விழா நடைபெறும். அதன்படி நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
விழாவில் மயிலம் ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள் தலைமை தாங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மயிலம் சிவப்பிரகாசர் பள்ளி செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார். ராஜராஜேஸ்வரி கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் சிவக்குமார், தமிழ்க் கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கோயம்புத்துார் கவுமார மடாலயம் 4ம் பட்ட ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பாலசித்தரின் ஆன்மிக நெறிகள் குறித்து சொற்பொழிவாற்றினார்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் செல்லபாண்டியன், புதுச்சேரி கல்வித்துறையில் பணி ஓய்வு பெற்ற முதுநிலை விரிவுரையாளர் திருமாவளவன், அழகப்பா பல்கலைக்கழக இணை பேராசிரியர் சிதம்பரம் ஆகியோருக்கு சிவஞானியால் விருது வழங்கப்பட்டது.
நல்லாத்துார் சிவப்பிரகாச சுவாமிகளின் 'சதமணி மாலை' என்ற நூலுக்கு புதிதாக கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு எழுதிய மூலமும். உரையும் எனும் புத்தகத்தை மயிலம் 20ம் பட்ட ஆதீனம் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் புலவர் ஆதிகேசவன், கேரளா வீரசைவ சங்க தலைவர் சிவசங்கரன், வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பன்னிருகை வடிவேலன் மற்றும் தமிழ் அறிஞர்கள் பேசினர்.
மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி தலைவர்கள் முருகன், சிவக்குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.