/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'கள்' இறக்க அனுமதிக்கும் செங்கல்பட்டு போலீசார் டி.ஐ.ஜி., கவனிப்பாரா?
/
'கள்' இறக்க அனுமதிக்கும் செங்கல்பட்டு போலீசார் டி.ஐ.ஜி., கவனிப்பாரா?
'கள்' இறக்க அனுமதிக்கும் செங்கல்பட்டு போலீசார் டி.ஐ.ஜி., கவனிப்பாரா?
'கள்' இறக்க அனுமதிக்கும் செங்கல்பட்டு போலீசார் டி.ஐ.ஜி., கவனிப்பாரா?
ADDED : ஜன 23, 2024 05:19 AM

செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் 'கள்' இறக்குவதால் விழுப்புர மாவட்ட போலீசாருக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.
மரக்காணம் காவல் நிலையத்திற்குட்பட்ட எக்கியர்குப்பத்தில் கடந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் இறந்தனர்.
இதனால் இந்த பகுதியில் கள்ளச்சாராயம், 'கள்', புதுச்சேரி மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் மரக்காணம் போலீசார் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கடந்த மாதம் பனை மரத்தில் இருந்து 'கள்' மற்றும் பதநீர் இறக்கும் சீசன் துவங்கியதால் மரக்காணம் பகுதியில் பதநீர் இறக்க அரசு அனுமதி பெற்ற சிலர் பதநீர் இறக்குவதாக கூறி 'கள்' இறக்கி விற்பனை செய்து வந்தனர்.
இது குறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிந்ததும் 'கள்' இறக்கி விற்பனை செய்ய பனை மரத்தில் கட்டி வைத்த பானைகளை உடைத்து அப்புறப்படுத்தினர்.
இதனால் மரக்காணம் போலீசாருக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு காவல் நிலையத்திற்குட்பட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் மரக்காணம் காவல் நிலைய எல்லையை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக சூணாம்பேடு போலீசார் அனுமதியுடன் 'கள்' இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
மரக்காணம் பகுதியில் 'கள்' இறக்க மரக்காணம் போலீசார் அனுமதிக்காததால் இங்குள்ள 'கள்' இறக்கும் தொழிலாளிகள் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் உள்ள பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து 'கள்' இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் மரக்காணம் பகுதியில் இருந்து தினந்தோரும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் உள்ள சூணாம்பேடு பகுதியில் 'கள்' குடிக்க திரள்கின்றனர்.
'கள்' குடித்து விட்டு வருபவர்களால் தினந்தோறும் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகள் ஏற்படுகிறது.மேலும், சூணாம்பேடு பகுதியில் 'கள்' குடிக்கச் செல்பவர்கள் அங்கிருந்து லிட்டர் கணக்கில் கேன்களில் வாங்கி வந்து மரக்காணம் பகுதியில் விற்பனை செய்கின்றனர்.
இதனால் மரக்காணம் பகுதியில் 'கள்' இறக்கி விற்பனை செய்வதாக வதந்தி ஏற்படுவதால் போலீசாருக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என போலீசார் புலம்புகின்றனர்.
இது குறித்து மரக்காணம் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளனர். இது தொடர்பாக ஐ.ஜி., கண்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

