/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வரத்து ஓடை ஆக்கிரமிப்பு, பெயர்ந்த ரோடு
/
வரத்து ஓடை ஆக்கிரமிப்பு, பெயர்ந்த ரோடு
ADDED : செப் 17, 2025 07:30 AM

காரியாபட்டி: வீதிகளில் தரை பெயர்ந்து கற்களாக கிடக்கும் ரோடு, சேதமடைந்த சுகாதார வளாகங்கள்,வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் தேங்கும் கழிவுநீர் உட்பட பல்வேறு பிரச்னைகளால் காரியாபட்டி பிசிண்டியில் குடியிருப்போர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் அமுதா, முத்துலட்சுமி, அழகம்மாள், பாண்டிச் செல்வி, சுந்தரம்மாள், சின்ன தங்கச்சி கூறியதாவது: மந்தை ஊருணிக்கு வரும் வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் மூடப்பட்டு நீர் வரத்து இல்லாமல், கழிவு நீரை தேக்குகின்றனர். கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. ஓராண்டாகியும் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் செயல்பாட்டுக்கு வரவில்லை. காளியம்மன் கோயில் தெரு பள்ளமாக உள்ளதால் மழை நீர் தேங்குகிறது.
ஊருக்குள் இருந்து வெளியேறும் கழிவுநீர் காலனி அருகே தேங்குகிறது. கொசுத்தொல்லையால் அப்பகுதியில் குடியிருக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காலனியில் இரு வீதிகளில் தரை தளம் பெயர்ந்து, கற்களாக கிடப்பதால் ஆட்கள் நடந்து செல்ல முடியவில்லை. மேல்நிலைத் தொட்டி சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது. உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 சுகாதார வளாகங்கள் இருந்தும் சரிவர பராமரிக்காததால் பயன்பாடு இன்றி கிடக்கின்றன.
காலனியிலிருந்து ஊருக்குள் செல்லும் ரோடு படுமோசமாக உள்ளது. அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் அசுத்தமாக கிடக்கிறது. ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கி படுமோசமாக இருப்பதால் ஆட்கள் நடந்து செல்ல முடியவில்லை.
ஆக்கிரமிப்பை அகற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரை தள தொட்டி உடைந்து கிடக்கிறது. புழக்கத்திற்கான தண்ணீர் சரிவர கிடைக்காததால் சிரமமாக உள்ளது. காலனி அருகே உள்ள ஊருணியை தூர்வாரி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

