/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எறைய நாயக்கர் ஊருணியை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு
/
எறைய நாயக்கர் ஊருணியை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 18, 2025 12:00 AM

விருதுநகர்: விருதுநகரில் மாசடைந்து வரும் கருப்பசாமி நகர் எறைய நாயக்கர் ஊருணியை மீட்டெடுக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
சிவஞானபுரம் ஊராட்சி கருப்பசாமி நகரில் நாயக்கர் காலத்தில் உருவான எறைய நாயக்கர் ஊருணி 300க்கும் மேற்பட்ட வீடுகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது. இப்பகுதியிலுள்ள கால்நடைகளுக்கும் நீராதாரமாக திகழ்ந்தது.
இந்நிலையில் முறையாக துார்வாரப்படாமல் கரையோரங்களில் முட்புதர்கள் நிறைந்தும் பிளாஸ்டிக் குப்பை குவிந்தும் காணப்பட்டு கழிவுநீர் தேக்கமாக மாறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நிலத்தடி நீர் மாசடைந்து நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
கரையோரம் ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் செலவில் 30 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு காட்சிப் பொருளாகவே உள்ளது. தற்போது பெய்யும் கோடை மழையை சேகரிக்க முடியாத வகையில் அசுத்தம் நிறைந்து காணப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையுள்ளது.
அப்பகுதியினர் கூறுகையில், '2015ல் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இவ்வூருணி மறுசீரமைக்கப்பட்டது. அதன்பின் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. ஊருணிக்குள் இறங்க முடியாத வகையில் படித்துறை கடுமையாக சேதமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்குள் ஊராட்சி நிர்வாகிகள் ஊருணியை சீரமைத்து மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்றனர்.

