/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீரில் கழிவு நீர் கலந்து வினியோகம்; விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
/
குடிநீரில் கழிவு நீர் கலந்து வினியோகம்; விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
குடிநீரில் கழிவு நீர் கலந்து வினியோகம்; விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
குடிநீரில் கழிவு நீர் கலந்து வினியோகம்; விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ADDED : பிப் 01, 2024 11:51 PM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சிக் கூட்டத்தில் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நகராட்சி தலைவர் மாதவன் தலைமை வகித்தார். கமிஷனர் லீனாசைமன், பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ஜெயக்குமார்(மார்க்சிஸ்ட்): எம்.எஸ்.பி.ராஜா சந்தையில் 35 கடைகளுக்கு ஏலம் எடுத்து விட்டு நகரில் உள்ள 36 வார்டுகளிலும் உள்ள சாலையோரக் கடைகளில் வசூல் செய்து கொள்ளலாமா. அவ்வாறு செய்வதால் நகரில் விரும்பத்தகாத பல சம்பவங்கள், படுகொலைகள் நடக்கிறது. சொந்தக் கடையின் முன்பு தள்ளு வண்டியை வைத்து வியாபாரம் செய்தால் கூட அடாவடியாக பணம் கேட்கும் நிலை உள்ளது. எனவே இதை முறைப்படுத்த வேண்டும். நகராட்சிக்கு கூடுதலாக பணம் வரும் என்பதால் பொது மக்கள், சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது.
மாதவன், நகராட்சித்தலைவர்: இந்த பொருள் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ரோகிணி, ராஜ்குமார், பேபி (காங்.,கவுன்சிலர்கள்) குடிநீருடன் கழிவு நீர் சேர்ந்து வருவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தலைவர்: பாதாள சாக்கடை நீர் உந்து நிலையங்களில் மின் மோட்டார்கள் பழுதாகி உள்ளது. புதிய மோட்டார்கள் 15 நாட்களுக்குள் பொருத்தப்படும். அவ்வாறு செய்தால் இப்பிரச்சனை சீராகும், என்றார்
ரம்யா (காங்.): புதிதாக பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்ட வீடுகளிலிருந்து கழிவு நீர் வெளியேறாமல் உள்ளே வருகிறது. மேலும் இணைப்பு கொடுக்க வந்தவர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் கட்டாய பண வசூலில் ஈடுபட்டனர்.
ராமச்சந்திரன் (அ.ம.மு.க.,), முத்துலெட்சுமி (சுயேச்சை): பாதாள சாக்கடை மெயின் குழாய்களில் அடைப்புகளை சரி செய்த பின்பும் கழிவு நீர் முறையாக செல்லவில்லை
வெங்கடேஷ், சரவணன் (அ.தி.மு.க.,): குழல் விளக்குகளை எல்.இ.டி விளக்காக மாற்றும் பணி சரிவர நடக்கவில்லை. நகரின் முக்கிய ரோடுகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது
லீனாசைமன், நகராட்சி கமிஷனர்: உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். ஒரு வாரத்தில் ஏலதாரரிடம் அப்பணியை முடிக்க ஏற்பாடு செய்யப்படும்.
கலையரசன் (தி.மு.க.,): சி.எஸ்.ஆர்., நிதி மூலம் போடப்பட்ட அனைத்து சூரிய ஒளி மின் விளக்குகளும் எரியவில்லை.
ஆறுமுகம் (தி.மு.க.,): குழாய் உடைப்புகளை சரி செய்ய ரோடுகள் தோண்டப்படுகின்றன. ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் அங்கு சாலை சீரமைக்கப்படுவதில்லை.
மதியழகன் (தி.மு.க.,): புல்லலக்கோட்டை சாலையின் இருபுறமும் உள்ள மழை நீர் வடிகால்கள் தனி நபர்களால் மூடப்பட்டுள்ளன. இதனால் மழை நீர் செல்ல வழியின்றி ரோடு பழுதாகிறது. எனவே, மூடப்பட்ட வடிகால்களை மீட்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

