/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உச்சத்தில் விதைகள், உரங்கள் விலை
/
உச்சத்தில் விதைகள், உரங்கள் விலை
ADDED : செப் 17, 2025 02:32 AM
திருச்சுழி, திருச்சுழி பகுதிகளில் விதைகள், உரங்கள் விலை உச்சத்திலும், தட்டுப்பாட்டிலும் இருப்பதால் விவசாயிகள் மழை பெய்தும் விவசாயம் செய்ய முடியாமல் திணறுகின்றனர்.
திருச்சுழி அருகே மேலையூர், பரளச்சி, ராஜகோபாலபுரம் உள்ளிட்ட 45 க்கு மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்தப் பருவத்திற்கான மழை தாமதமாக பெய்த போதிலும் விவசாயிகள் தங்கள் நிலத்தை உழுது விவசாய பணிகளில் மும்முரமாக உள்ளனர்.
ஆனால் கூட்டுறவு சங்கங்களில் கம்பு ,சோளம் ,உளுந்து உள்ளிட்ட விதைகளும், டி.ஏ.பி., யூரியா உட்பட உரங்களும் தேவையான அளவு கிடைக்காமல் தட்டுப்பாடாக உள்ளது. விதைகளையும் உரங்களையும் தேடி விவசாயிகள் அலைய வேண்டிய நிலையில் உள்ளனர். உரிய பருவத்தில் விதைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தனியார் உர கடைகளுக்கு செல்கின்றனர்.
சூரியகாந்தி, கம்பு, உளுந்து தனியார் உர கடைகளில் அரசு நிர்ணய விலையை விட கூடுதலா விற்படுவதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். கூட்டுறவு சங்கங்களில் 1 ஆதார் அட்டைக்கு 1 மூடை உரம் தான் தருகின்றனர். தனியார் உரக்கடைகளில் 1 மூடை டிஏபி ., மூடை கேட்டால், 1 மூடை வேப்பம் புண்ணாக்கு வாங்கினால் தான் தருகின்றனர்.
டி.ஏ.பி., ஆயிரத்து 400 ரூபாய், புண்ணாக்கு ஆயிரத்து 800 ரூபாய். இப்படி விதைகள் மற்றும் உரங்கள் விலை உயர்ந்தால் நாங்கள் என்ன செய்வது என்றும், இவற்றையெல்லாம் மீறி விவசாயம் செய்து நாங்கள் எங்கள் பயிர்களுக்கு எப்படி விலை வைப்பது. விவசாயத்தை தவிர வேறு ஒன்றும் எங்களுக்கு தெரியாது என விவசாயிகள் புலம்புகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் விவசாய காலத்திலும் உரிய நேரத்தில் உரங்களையும் விதைகளையும் தட்டுப்பாடு இல்லாமல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

