ADDED : பிப் 01, 2024 11:54 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று அதிகாலை 5:20 மணி முதல் பலத்த சாரல் மழை பெய்யத் துவங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் தாக்கம் குறைந்து காலை 8 மணியளவில் மழை நின்றது.
பைபாஸ் ரோடு பெரிய மாரியம்மன் கோவில் உட்பட பல தெருக்களில் கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடியது. கிழரதவீதி நேரடி தெருவில் ராமையா என்பவரின் வீட்டில் கூரை இடிந்து விழுந்தது. செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை இல்லாத சூழலில், மம்சாபுரம் நகர் பகுதியில் மழை கொட்டியது.
வத்திராயிருப்பில் 14.6 மி. மீ. மழை பதிவானது. பிளவக்கல் பெரியாறு அணையில் 2.2 மீட்டர் மழை பதிவானது. அணையில் 38 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. கோவிலாறு அணையில் 6.2 மி. மீ. மழை பதிவானது. அணையில் தற்போது 36.5 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
சில நாட்களாக அதிகாலையில் குளிரும், 10 மணிக்கு மேல் கடும் வெயிலும் இருந்த நிலையில் நேற்று பெய்த மழை குளிர்ச்சியை தந்தது.

