/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடியில் படுவேகமாக நடக்குது செம்மண் திருட்டு
/
நரிக்குடியில் படுவேகமாக நடக்குது செம்மண் திருட்டு
ADDED : மே 25, 2025 05:49 AM
நரிக்குடி : நரிக்குடி பகுதியில் செம்மண் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
நரிக்குடி,  சாலை இலுப்பைகுளம், துய்யனூர்,  உவர் புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில்  2 ஆண்டுகளுக்கு முன் பட்டா நிலங்களில் பண்ணை குட்டை வெட்டினர். தண்ணீர் பற்றாக்குறையை போக்க,  நிலத்தடி நீர்மட்டம்  உயர, விவசாயம் செழிக்க, விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு மானியம் வழங்கி ஊக்குவித்து வருகிறது. அதன் அடிப்படையில் விவசாயிகள் பலர்  பண்ணை குட்டை வெட்டினர்.
இந்நிலையில் டிராக்டர்,  லாரி உரிமையாளர்கள்,  விவசாயிகளிடம் பேரம் பேசி செம்மண்ணை அனுமதிச்சீட்டு இன்றி திருட்டுத்தனமாக எடுத்து 3  யூனிட்டுகள் ரூ. 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டிய செம்மண்ணை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
3  மாதங்களுக்கு முன் நரிக்குடி  வரிசையூரில்  100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மக்கள் பயன்பாட்டிற்கு வெட்டப்பட்ட ஊருணியில் உள்ள செம்மண்ணை திருட்டுத்தனமாக எடுத்து விற்பனை செய்தனர். அதிகாரிகளுக்கு கிராமத்தினர் தகவல் தெரிவித்ததையடுத்து செம்மண் எடுத்த வாகனங்களை பறிமுதல் செய்து,  சம்பந்தப்பட்டவர்கள் மீது வீரசோழன் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதற்குப் பின் அப்பகுதியில் செம்மண், கிராவல்  திருடுவது ஓரளவுக்கு குறைந்தது. தற்போது நரிக்குடி பகுதியில் செம்மண் திருட்டு அதிகரித்து வருவதை வருவாய்த்துறை,  போலீசார்  அனுமதி இன்றி எடுத்து வருவரை கண்டறிந்து,   உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

