/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால், தெருவிளக்கு வசதிகள் இல்லை
/
ரோடு, வாறுகால், தெருவிளக்கு வசதிகள் இல்லை
ADDED : ஜன 24, 2024 05:02 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வரும் தங்கள் பகுதியில் முறையான ரோடு, வாறுகால், தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜெயம் தென்றல் நகர் குடியிருப்பாளர்கள்
அப்பகுதி குடியிருப்பாளர்களான வெற்றிவேல், சந்திரபோஸ், பொற்கொடி, ருத்ரகனி, மாரி ஸ்ரீ, சந்தான லட்சுமி ஆகியோர் கூறியதாவது;
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 33வது வார்டின் ஒரு பகுதியாக ஜெயம் தென்றல் நகர் உள்ளது. தற்போது 50 வீடுகளுக்கும் மேல் உள்ள நிலையில் புதிய குடியிருப்புகள் கட்டும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கட்டிய வீடுகளுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வரி இனங்கள் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், கோவிந்தன் நகர் காலனி மெயின் ரோட்டில் இருந்து இப்பகுதிக்கு வரும் பாதை மண் ரோடாக இருப்பதால் மழைக்காலத்தில் சகதி ஏற்பட்டு நடந்து செல்ல கூட முடியவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
முறையான கழிவு நீர் வாறுகால் வசதியும் இல்லாததால் ஒவ்வொரு வீட்டு கழிவு தண்ணீரும் அடுத்த காலி பிளாட்டுகளில் தேங்கி கொசு தொல்லை ஏற்படுகிறது. மாலை 4:00 மணிக்குமேல் தெருவில் நடமாட முடியவில்லை. இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி வருகிறோம்.
சமீபத்தில் பெய்த மழையினால் கண்மாய் உடைந்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஓடைகளில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து குடியிருப்பு பகுதியில் கொட்டி விட்டு செல்கின்றனர். தெரு விளக்குகள் இல்லாததால் இரவு 6:00 மணிக்கு மேல் இருண்ட சூழ்நிலை ஏற்பட்டு ஒருவித அச்சத்துடன் தான் நடந்து செல்ல வேண்டியது உள்ளது.
தற்போது மழை பெய்துள்ளதால் போதிய தண்ணீர் கிடைத்தாலும் வறட்சி காலங்களில் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. விளையாட்டு பூங்காவிற்கான இடத்தில் கருவேல முள் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் விளையாட இடமின்றி குழந்தைகள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை உள்ளது.
எனவே, எங்கள் குடியிருப்பு பகுதியில் உடனடியாக நகராட்சி நிர்வாகம் ரோடு, கழிவு நீர், வாறுகால், தெருவிளக்கு, விளையாட்டு பூங்கா, மேல்நிலை தண்ணீர் தொட்டி போன்ற அடிப்படை வசதிகளை காலதாமதம் இன்றி செய்து தர வேண்டும், என்றனர்.

