பருத்தி நுால் ஏற்றுமதி 10% உயர்வு ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சுணக்கம்
பருத்தி நுால் ஏற்றுமதி 10% உயர்வு ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சுணக்கம்
ADDED : ஜன 21, 2024 10:46 AM
திருப்பூர் : இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில், ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதி முக்கிய இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் நிலவும், பொருளாதார மந்தநிலை காரணமாக, ஏற்றுமதி வர்த்தகம், சில மாதங்களாக சரிவுநிலையை சந்தித்து வருகிறது.
பருத்தி நுால் மற்றும் துணி ஏற்றுமதியும் எதிர்பாராத அளவுக்கு சரிந்திருந் தது. நீண்ட இடைவெளிக்கு பின், பருத்தி மற்றும் செயற்கை நுாலிழை, துணி ஏற்றுமதி படிப்படியாக முன்னேறியுள்ளது.
கடந்த, 2022 டிச., மாத நிலவரப்படி, பருத்தி நுால், துணி, கைத்தறி வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி, 7,119 கோடி ரூபாயாக இருந்தது. 2023 டிச., மாதம், 7,809 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. இது, கடந்த ஆண்டு டிச., மாதத்தை காட்டிலும், 710 கோடி ரூபாய் அதிகம்; 9.69 சதவீதம் உயர்ந்துள்ளது.
செயற்கை நுாலிழை, துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி, 2022 டிச., மாதம் 3,187 கோடி ரூபாயாக இருந்தது; கடந்த டிச., மாதம் 3,119 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.
நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2022 டிச., மாதம், 12,216 கோடி ரூபாயாக இருந்தது; கடந்த டிச., மாதம், 10,787 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல், கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில், 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது.
இதுகுறித்து பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:
ரஷ்யா - உக்ரைன் போர் நடப்பதால், வளர்ந்த நாடுகளில் இருந்து, ஆர்டர் வரத்து மந்தமாகியுள்ளது. இதன் காரணமாக, நிதியாண்டு துவக்கத்திலிருந்தே வர்த்தகம் சவாலாக இருந்தது. தற்போது பருத்தி நுால் மற்றும் துணி, செயற்கை நுாலிழை மற்றும் துணி ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்து வரும் மாதங்களில் வர்த்தகம் உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

