ADDED : ஜன 13, 2024 11:16 PM
சென்னை:''தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்வோர் எண்ணிக்கை, 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை, சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 27. சமீபத்தில் அண்ணா சாலையில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று மூளைச்சாவு அடைந்தார்.
அவரது குடும்பத்தினர், உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்தனர். இதயம், கல்லீரல், நுரையீரல், கண்கள் உள்ளிட்ட ஏழு உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. உறுப்பு தானம் அளித்த அவரது உடலுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் அரசு மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மூளைசாவு அடைந்த ராமமூர்த்தியின் உடல் உறுப்புகள் தானத்தால், ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. அரசு மரியாதை செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த, 61 பேர் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டு உள்ளன.
கடந்த, 2022ம் ஆண்டை விட, 2023ல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை, 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 3,958 பேர் தங்களுடைய மறைவுக்கு பின், உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துஉள்ளனர்.
உடலுறுப்பு வேண்டி காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறுநீரகத்துக்கு 6,322 பேர்; கல்லீரல் 438; இதயம் 76; நுரையீரல் 64; இதயம் மற்றும் நுரையீரல் 25, கைகள் 27; சிறுகுடல் 2; சிறுநீரகம் மற்றும் கல்லீரல் 40.
சிறுநீரகம் மற்றும் கணையம் 42; கணையம், சிறுகுடல் மற்றும் வயிறு ஒருவர் என, 7,037 பேர் உடலுறுப்பு வேண்டி காத்திருக்கின்றனர். கடந்தாண்டு, 178 பேர் உடல் உறுப்புகள் தானம் அளித்ததால், 1,000 பேர் பயன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

