ADDED : மார் 25, 2025 04:21 AM

சென்னை : தமிழகம் முழுதும், 14 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக காத்திருப்பு பட்டியலில் இருப்பதால், பொது மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம், 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 56 யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், வாகன உரிமையாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல், வாகன வரி வசூல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன.
ஆட்கள் பற்றாக்குறையால், ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட ஆவணங்கள் வழங்குவதில், பல நாட்களாக தாமதம் ஏற்படுகிறது. இதற்கிடையே, 14 வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஒன்றரை மாதமாக காத்திருப்பு பட்டியலில் இருப்பது, வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பணிச்சுமை அதிகரித்து வருகிறது ஆனால், புதிதாக ஊழியர்களை நியமனம் செய்வதில்லை. தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுதும், 21 ஆர்.டி.ஓ., பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடந்த, ஒன்றரை மாதமாக, 14 வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். தாம்பரம், சோழிங்கநல்லுார், தென்காசி, மார்த்தாண்டம் உள்ளிட்ட முக்கியமான ஆர்.டி.ஓ.,க்கள் அதில் உள்ளனர்.
எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், இவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது, பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.
இந்நிலையில், சில ஆர்.டி.ஓ.,க்கள், இரண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் பணிகளை செய்து வருகின்றனர். இதனால், ஓட்டுநர் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு உள்ளிட்ட பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.