ADDED : ஜன 23, 2024 10:28 PM
பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி அறிக்கை:
தமிழகத்தில் தை மாத துவக்கத்தில், பத்திரப் பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, ஜன., 18 முதல் 31 வரை, அனைத்து வேலை நாட்களிலும் கூடுதல் 'டோக்கன்'கள் வழங்க உத்தரவிடப்பட்டது.
இதன் அடிப்படையில், பதிவாகும் பத்திரங்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, நேற்று முன்தினம் ஒரே நாளில், 21,000 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் வாயிலாக, 168.83 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது.
இதில், சென்னை மண்டலத்தில் மட்டும், அடுக்குமாடி குடியிருப்பு திட்ட வீடுகள் விற்பனை தொடர்பாக, 137 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வரும் நாட்களிலும் இதே போன்று பத்திரப்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

