ADDED : ஜூன் 24, 2025 11:53 PM
சென்னை:முதியவரின் வயிற்றில் இருந்த, இரண்டு கிலோ எடையுடைய கட்டியை, அன்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி, அவருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, ராஜலட்சுமி ஹெல்த்சிட்டி துணைத்தலைவர் ஹரிசங்கர் மேகநாதன் கூறியதாவது:
ராஜலட்சுமி ஹெல்த் சிட்டி கீழ் செயல்படும், அன்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 69 வயது நபர், வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேம்பட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது சிறுகுடலில், பெரிய அளவில் அரிய வகை கட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
மருத்துவமனையில் உள்ள நவீன மருத்துவ தொழில்நுட்ப உதவிகளுடன், 69 வயது நபரின் வயிற்றில் இருந்த, இரண்டு கிலோ எடையுள்ள கட்டியை, டாக்டர்கள் அகற்றினர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
எங்கள் மருத்துவமனையில், உயர்தர சிகிச்சை, நோயாளிகளுக்கு சுமையாக இல்லாத வகையில், சிகிச்சை அளிப்பதை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.