ஜன.25ல் தைப்பூச தெப்ப தேரோட்டம்; ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு
ஜன.25ல் தைப்பூச தெப்ப தேரோட்டம்; ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு
ADDED : ஜன 22, 2024 11:21 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ஜன.25ல் தைப்பூச தெப்பத் தேரோட்டம் நடக்க உள்ளதால் கோயில் நடை அடைக்கப்படுகிறது.
ஜன.25ல் தைப்பூசத்தன்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து அதிகாலை 5:00 முதல் 5:30 மணி வரை படிகலிங்க பூஜை நடக்கும்.
இதனைத் தொடர்ந்து கால பூஜை, உச்சிக்கால பூஜை, சாயரட்சை பூஜைகள் நடக்கிறது.
காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி திருக்கோயிலின் உப கோயிலான லட்சுமணேஸ்வரர் கோயிலில் எழுந்தருள்வார்கள்.
மாலை 5:00 மணிக்கு லட்சுமணேஸ்வரர் கோயில் தெப்ப மண்டபத்தில் மகா தீபாராதனை நடக்கும். பின் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும் தைப்பூச தெப்பத் தேரோட்டம் நடக்கும்.
இவ்விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் ஜன.25 காலை 10:00 மணி முதல் இரவு வரை கோயில் நடை சாத்தப்படும் என இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.

