முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 370 உள்கட்டமைப்பு திட்டங்கள்
முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 370 உள்கட்டமைப்பு திட்டங்கள்
ADDED : செப் 11, 2025 01:33 AM
சென்னை, செப். 11-
தமிழகத்தில், 370 உள்கட்டமைப்பு திட்டங்களை, முதல்வரின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வர, தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
உள்கட்டமைப்பு திட்டங்களை, 'ஆன்லைன்' முறையில் கண்காணிப்பதற்கான வசதிகளை, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என, மத்திய அரசின் தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு, மாநில அரசு களுக்கு கடிதம் எழுதி உள்ளது.
இது தொடர்பாக, தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் அனைத்து துறை செயலர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், உள்கட்டமைப்பு திட்டங்களை கண்காணிக்க, 'ஆன்லைன்' வசதியை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன், பெரிய அளவிலான கட்டமைப்பு திட்டங்களை கண்காணிக்க, 'இ - முன்னேற்றம்' என்ற பெயரில் 'ஆன்லைன்' வசதி ஏற்படுத்தப்பட்டது. இதில் சேர்க்கப்பட்ட திட்டங்கள் குறித்த விபரங்கள், முதல்வரின் நேரடி பார்வைக்கு செல்கின்றன.
தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட, உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த சில அடிப்படை தகவல்கள் மட்டுமே காணப் படுகின்றன. எனவே, இதை மேம்படுத்தும் வகையில், புதிய 'ஆன்லைன்' வசதியை ஏற்படுத்த வேண்டும் என, தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டார்.
மேலும், கூட்டத்தில் அவர் கூறியதாவது:
தமிழக மின் ஆளுமை முகமை வாயிலாக, புதிய 'ஆன்லைன்' வசதியை உருவாக்க வேண்டும். திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை செயலர் இதற்கான ஆலோசனைகளை, மின் ஆளுமை முகமைக்கு வழங்குவார். பிரச்னைகளை கண்காணிக்க, இந்த புதிய வசதி ஏற்படுத்தப்படும். இதில், 14 தலைமைச் செயலக துறைகளின், 370 உள்கட்டமைப்பு திட்டங்களின் விபரங்கள் சேர்க்கப்படும்.
முதல் கட்டமாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்கள், இதில் இணைக்கப்படும். இதனால், அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களும், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நேரடி பார்வைக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.