ADDED : மார் 26, 2025 06:45 PM
சென்னை:'டில்லியில் இன்று நடக்க உள்ள, தமிழக காங்., மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஏழு பேர் செல்லவில்லை' என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து, காங்., கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், அடுத்த மாதம் 8, 9 தேதிகளில், காங்கிரஸ் மாநாடு நடக்க உள்ளது. இதில், கட்சியை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து, உயர்மட்டக் குழு ஆலோசிக்க உள்ளது. அதற்கு முன்பு, மாவட்டத் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து, மாவட்டத் தலைவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
இதற்காக, டில்லியில் உள்ள இந்திரா பவனில், 750 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம், இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. தமிழக காங்கிரசில், 77 மாவட்டத் தலைவர் பணியிடங்களில், ஒன்பது காலியாக உள்ளன. பதவியில் உள்ள 68 மாவட்டத் தலைவர்களில், 61 பேர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். உடல் நலக்குறைவு, சொந்த பணி உள்ளிட்ட காரணங்களால், ஏழு பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.