ADDED : பிப் 01, 2024 11:30 PM

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து பல்துறை வல்லுனர்கள், தொழில், வர்த்தக பிரமுகர்கள் கூறியதாவது:
- தீனதயாளன், பேராசிரியர், பொருளியல் துறை, மதுரைக் கல்லுாரி, மதுரை
இந்த இடைக்கால பட்ஜெட்டில் நேரடி மற்றும் மறைமுக வரிகளில் மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளித்தாலும் பொதுவான கொள்கை முடிவுகள் எதுவும் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பது ஆறுதலான விஷயம். 2024 -25 பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதம் என்பது சற்று அதிகம் என்றாலும் அரசின் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.1.66 லட்சம் கோடி என்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக சுற்றுலா மேம்பாடு, புதிய விமான நிலையங்கள், 517 விமான வழித்தடங்கள், பெண்களுக்கு கடன் உதவி, அந்நிய நேரடி முதலீடு, ஆராய்ச்சி மேம்பாடு, கட்டுமான வசதி மேம்பாடு, இளைஞர்களுக்கு கடனுதவி, பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க தடுப்பூசி திட்டம், ஒரு கோடி பயனாளிகளின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் போன்ற திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வரவேற்கத்தக்கவை.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்துறைக்கு போதிய முக்கியத்தும் தரப்படவில்லை. பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை இல்லை. 1.4 கோடி இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கான திட்டம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தேசியக் கல்விக்கொள்கை 2020ன்படி ஆசிரியர் மேம்பாட்டிற்கு பயிற்சி நிறுவனங்கள், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., ஐ.ஐ.டி.எஸ்.சி., ஐ.ஐ.ஐ.டி.ஐ., மற்றும் பல்கலைகள் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பாராட்டு. நாட்டின் வளர்ச்சியை மையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
- ஜெகதீசன், தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்
தொழில் வணிகம் மற்றும் மாதச் சம்பளம் பெறுவோர் என சுமார் 37 சதவிகிதம் பேர் வரி செலுத்தி வரும் நிலையில், வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது, ஏமாற்றம்.
10 ஆண்டுகளுக்கு முன் மறைமுக வரிகள் வாயிலாக மாதம் ரூ. 80,000 கோடி வரி திரட்டப்பட்ட நிலையில், தற்போது சரக்கு மற்றும் சேவை வரியில் மாதம் ரூ.1,70,000 கோடி திரட்டப்பட்டு வந்தாலும், தொழில் வணிகத் துறையினரின் நியாயமான கோரிக்கைகளை ஜி.எஸ்.டி., கவுன்சிலோ அல்லது நிதித் துறை நிர்வாகமோ செவிமடுத்து கேட்பதும் இல்லை. இப்பட்ஜெட்டிலும் எதுவும் இல்லை.
சுமார் 600-க்கும் மேற்பட்ட டோல் கேட்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களின் போக்குவரத்துக்கு விதிக்கப்படும் கட்டணம், ஆண்டுதோறும் 10 முதல் 15 சதவிகிதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையான டோல் கேட்கள் எண்ணிக்கையும் டோல் கட்டணமும் குறைக்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. தொழில் வணிக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ அறிவிப்புகள் இல்லாத பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
- ரத்தினவேல், தலைவர், வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கம், மதுரை
கட்டமைப்பு போன்ற முதலீட்டு செலவுகளுக்கு கூடுதல் ஒதுக்கீடாக ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்து, அதே நேரத்தில் நிதிப்பற்றாக் குறையை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக குறைத்திருப்பது பாராட்டத்தக்கது. குறிப்பாக 40,000 ரயில் பெட்டிகளை மிக நவீன வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கு இணையாக மாற்ற இருப்பது, ரயில் மூலம் அதிக சரக்கு போக்குவரத்து நடைபெறும் நெரிசல் மிக்க பாதைகளில் சரக்கு போக்குவரத்துக்கென தனிப்பாதைகள் அமைக்கப்பட இருப்பதும் பெரிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட இருப்பதும் தொழில் வணிகம், சுற்றுலாவை மேம்பாடு அடைய செய்யும். வேளாண் துறையில் மதிப்புக் கூடுதல் பொருட்கள் தயாரிப்பதற்கும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
மீன் வளர்ச்சி துறையில் கடல் உணவு ஏற்றுமதியை ரூ. 1 லட்சம் கோடி அளவிற்கு உயர்த்தி 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள். அதேநேரம் ஜி.எஸ்.டி., வரியில் 2.0 என்ற இரண்டாவது தலைமுறை சீர்திருத்தம் வெளிவரும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றம் தந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும்.
- வேல்சங்கர், தலைவர் - ஜெயப்பிரகாசம், கவுரவ ஆலோசகர் தமிழ்நாடு உணவுப் பொருட்கள் வியாபாரிகள் சங்கம், மதுரை
இப்பட்ஜெட்டில் வேளாண் விளை பொருள் அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைக்கு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது, கால்நடை வளர்ப்பதை ஊக்குவிக்கும் திட்டங்கள், உரம் தயாரிப்பில் நானோ தொழில்நுட்பங்கள், லட்சத் தீவை சுற்றுலாவுக்காக மேம்பாடு செய்யும் திட்டம், மின்சாரம் வாகனங்களை அதிகரிப்பதும், அதற்காக சார்ஜ் ஸ்டேஷன்கள் ஏற்படுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
ஜி.எஸ்.டி., வருவாய் ரூ. 1.7 லட்சம் கோடியை எட்டும்போது வரி குறைப்பு, வரி நிவாரணம் கொடுக்கப்படும் என முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உறுதியளித்தார். ஆனால் வரி வருவாய் உயர்ந்தும் வரி குறைப்பு, வரி தள்ளுபடி செய்யாத காரணத்தால் பல தொழில்களில் வரி ஏய்ப்போருடன் வரி செலுத்துவோர் போட்டி போட முடியாத நிலை உள்ளது. எனவே மாநிலம் தோறும் கமிட்டி அமைத்து நியாயமான கோரிக்கையை கேட்டு ஜி.எஸ்.டி., விகிதத்தை சரிசெய்ய மத்திய அரசு முன்வரவேண்டும்.
- சீனிவாசன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, மதுரை
இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வேலைவாய்ப்பு, காஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வருமான வரி தொடர்பாக எவ்வித மாற்றமும் இல்லாதது வரி செலுத்தக்கூடிய பிரிவினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஓய்வூதியர்கள், மகளிர், அரசு ஊழியர்கள், விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் பட்ஜெட்டாக அமையவில்லை.
- பத்மநாபன், தென்னக ரயில்வே பயணிகள் சங்க பொதுச்செயலாளர், மதுரை
மூத்த குடிமக்களுக்குவழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையை மீண்டும் வழங்கும் அறிவிப்பு இடம் பெறவில்லை என்பது ஏமாற்றம். பாதுகாப்பு துறைக்குமுதலீடு தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.40 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும், சரக்கு போக்குவரத்து பிரத்யோக வழித்தடம் அமைக்கப்படும் என்பதும், நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
- முத்துராஜா, தலைவர், பொருளாதாரத் துறைஅமெரிக்கன் கல்லுாரி, மதுரை
பசுமைப் பொருளாதாரம் சார்ந்த முன்னெடுப்புகள், பசுமை வளர்ச்சி, பசுமை சக்தி மற்றும் பசுமை சார்ந்த தொழில்திறன் மேம்பாடு திட்டங்கள் குறிப்பிடத்தக்கது. நேரடி மற்றும் மறைமுக வரிமுறையில் சிறிய மாற்றம் அல்லது குறைப்பு எதிர்பார்த்த நிலையில் கிடைக்கவில்லை. இந்தியப் பொருளாதாரம் நீடித்த நிலைத்த வளர்ச்சி அடைய ஜி 20 மாநாட்டு நோக்கங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள் பரிந்துரைத்த கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
உண்மையான வரிச்சுமையை தாங்கி பொருளாதார நிலையில் பின்தங்கி வாழும் பெரும்பாலான மக்கள் பற்றி முக்கியத்துவம் தராமல் பொருளாதார வளர்ச்சி மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. பகிர்வுப் பொருளாதாரம், நலம் மற்றும் சமூக நீதி சார்ந்தவை கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்தப்போக்கு உள்ளார்ந்த பொருளாதார வளர்ச்சியை பெற உதவாது.
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் வரவு செலவு திட்ட அறிவிப்புகளுக்கும் நிறைய இடைவெளி தெரிகிறது. இந்தியப் பொருளாதாரம் 2047ல் மிகச் சிறந்த முறையில் இருக்கும்படியான நோக்கங்களை அடைவதற்கு குறிப்பிடும் வகையில் குறிப்புகள் இல்லை.
- லட்சுமி நாராயணன், தலைவர்மடீட்சியா, மதுரை
2024ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் சிறு குறு, நடுத்தர தொழில்களுக்கு எந்தவித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. வருமான வரித் திட்டத்தில் தனிநபர் வருமான உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் பணப்புழக்கம் கூடுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
மறைமுக வரிகளான ஜி.எஸ்.டி.யில் எந்த மாற்றமும் இல்லை, நடைமுறைகள் எளிமைப் படுத்தவில்லை. கொரோனாவில் இருந்து மீண்ட பின் மூலப்பொருட்கள் விலை ஏற்றம், மின்கட்டண உயர்வு, வேலையாட்கள் பற்றாக்குறை காரணங்களால் 29 லட்சம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் திவாலாகியுள்ளன. இவற்றை மீட்பதற்கு எந்தவித சலுகைகளும் திட்டமும் அறிவிக்கப்பட வில்லை.
வங்கி வட்டி விகிதம் குறைக்கப்படாததால் சிறு குறு நடுத்தர தொழில்கள் நிதி மேலாண்மை செய்ய முடியவில்லை. வீடுகளுக்கு அறிவித்ததை போல மேல் தளத்தில் சோலார் அமைப்பதில் குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை. மொத்தத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு எதிர்பார்த்த எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை.
- கிருபாகரன், மண்டல தலைவர் தொழில் வர்த்தகர் சங்கம், திண்டுக்கல்
பட்ஜெட்டில் புதியதாக ஒன்றும் இல்லை. வணிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அரைத்த மாவையே அரைத்துள்ளனர். ஜி.எஸ்.டி.,யை பேசவே இல்லை. விலைவாசி உயர்வை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. சிறுகுறு வணிகர்களுக்கு பயனுள்ளதாக இல்லை. பெட்ரோல், டீசல் விலை அப்படியே இருக்கிறது. இதுபோன்றவற்றில் கவனம் செலுத்தினால் தான் மக்கள் பயனடைவர்.
சிலிண்டர் விலை குறைக்கவில்லை. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தேர்தலுக்கு முன்பு வரும் பட்ஜெட் என்பதால் சலுகைகள் கிடைக்கும் என பல தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக அரிசிக்கு வரி நீக்கப்படும் என நினைத்தோம்; அதிலும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
- எம்.எம்.ஆனந்தவேல், தலைவர், மாவட்ட மொத்த மற்றும் சில்லரை உணவு பொருட்கள் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு, தேனி.
எலக்ட்ரிக்கல் வாகனங்களுக்கான 'சார்ஜிங் ஸ்டேஷன்கள்' நாடு முழுவதும் அதிகரிக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உரத்திற்கு நானோ தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் உற்பத்தி செலவினங்கள் குறைந்த நிலையில், உணவு உற்பத்தி அதிகரிக்கும். வேளாண் சாகுபடியில் அறுவடையாகும் விளை பொருட்களை குளிர்பதன குடோன்களில் இருப்பு வைக்கவும், மதிப்பு கூட்டுதல் பணிகளுக்கும் திட்டம் வகுக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்படும் என்பதால் எதிர்காலத்தில் விலைவாசி உயராது.
வேளாண் விளைப் பொருட்களின் தரம் குறையாது. பற்றாக்குறையும் ஏற்படாது. இதனை வரவேற்கிறோம். தற்போது ஜி.எஸ்.டி., மூலம் ரூ.1.7 கோடி வருவாய் கிடைத்துள்ளது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளதால், வியாபாரிகள் எதிர்ப்பார்ப்பின் படி ஜி.எஸ்.டி., வரியின விகிதங்களை குறைக்க வேண்டும்.
- பி.ஜெகதீசன், மாவட்ட தலைவர் வணிகர் சங்கங்களின் பேரவை, ராமநாதபுரம்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகளில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுப்படுத்தல், தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.631 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். அதே சமயம் தனிநபர் வருமான உச்சவரம்பு, நேரடி, மறைமுக வரிவிதிப்பில் எந்த மாற்றமும் இல்லாதது வருத்தமளிக்கிறது. ஜி.எஸ்.டி., வரியில் மாநில அரசின் பங்கீடு தொகையை தராமல் வட்டியில்லாகடன் தருவதால் மாநில அரசுக்கு கடன் சுமை அதிகரிக்கும். குறைந்த கட்டணத்தில் விமான சேவை அறிவிப்பால் நடுத்தர மக்கள் பயன்பெறுவர். உள்கட்டமைப்புகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளதை பாராட்டுகிறோம். மருத்துவக் கல்லுாரிகளை அதிகரிக்க தனிக்குழு அமைப்பதை வரவேற்கிறோம்.
- எம்.ஆர்.சையது இப்ராஹிம்ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு ஜவுளி நிறுவன வியாபாரிகள் குழு, சிவகங்கை
இந்தியா விவசாய நாடு. ஆனால் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்த ஒதுக்கீடும் இடம்பெறவில்லை. விவசாய கருவிகள் டிராக்டர்கள் வாங்க எந்த மானியமும் இல்லை. இந்தியா முழுவதும் ஒருமுனை வரி விதிப்பதாக கூறினார்கள். அதை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்தோம் அறிவிப்பில்லை. தற்போது வரை ஜிஎஸ்டி, வருமான வரி தனித்தனியாக வசூல் செய்யப்படுகிறது வியாபாரிகளுக்கு வேதனை அளிக்கிறது. இந்த பட்ஜெட் பாமரனுக்கும், வியாபாரிக்கும், விவசாயிக்கும் பயனற்ற ஒரு பட்ஜெட்.
- கே.என். சரவணன், பொருளாளர்தொழில் வணிகக் கழகம், காரைக்குடி
இது தேர்தல் ஆண்டாக இருந்தும் இடைக்கால பட்ஜெட்டில் எந்தவிதமான சலுகைகளும் தரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தோம், எவ்வளவு பயனடைந்தனர் எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டுள்ளது என எடுத்துரைக்கும் விதமாக பட்ஜெட் இருந்தது. பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எதிர்பார்க்கப்பட்ட வரிச் சலுகை இல்லை.
--வி.வி.எஸ்.யோகன், வியாபார தொழில்துறை சங்கம், விருதுநகர்
பட்ஜெட்டில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அறிவிப்புகள் உள்ளன. வந்தே பாரத் ரயில்களை அதிகளவில் விடுவது பாரட்டதக்கது. 40 ஆயிரம் பெட்டிகளை புதுப்பிக்க போவதாக கூறுகின்றனர். கிராமங்களில் பால் உற்பத்தியை கூட்டுவதான அறிவிப்பு வரவேற்கதக்கது. மின் பற்றாக்குறையை தடுக்க வீடுகளில் சோலார் அமைத்தால் 300 யூனிட் இலவசம் என்பது புதிய அணுகுமுறை. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். சத்துணவு பணியாளர்களுக்கு காப்பீடு திட்டமும் நல்ல அறிவிப்பு.
- அமுதா, ஆடிட்டர், விருதுநகர்
நாடு வளர்ச்சி பாதை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்பதை பட்ஜெட் கூறுகிறது. விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நன்றாக உள்ளது. ரேஷன் கடைகள் மூலம் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்குவது மகிழ்ச்சி. ஜி.எஸ்.டி., பற்றி ரிட்டன்ஸ் விவரங்கள் பற்றி விழிப்புணர்வை வியாபாரிகள் மத்தியில் அதிகப்படுத்த வேண்டும். சமீப நாட்களாக பெண்கள் மத்தியில் கர்ப்பப்பை புற்று நோய் அதிகரித்து வருகிறது. இதற்காக தடுப்பூசி அறிவித்தது பாரட்டதக்கது. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் நமக்கு தேவையான நல்ல விஷயங்கள் உள்ளன.
நமது நிருபர் குழு

