ADDED : ஜன 13, 2024 11:44 PM
வேலுார்:வேலுார் மாவட்டம், அணைக்கட்டில் நேற்று, 'நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பங்கேற்று மத்திய அரசின் திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பின், குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தில், விழிப்புணர்வு யாத்திரை நிகழ்ச்சியை துவங்கி வைத்த அமைச்சர் பயனாளிகளுக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். வேளாண் பயிர்களுக்கு, ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் இயந்திரம், முதற்கட்டமாக நாட்டிலுள்ள, ஒரு கோடி பெண்களுக்கு, மத்திய அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.
தற்போது நாட்டில், 80 கோடி பேருக்கு மாதம், 5 கிலோ இலவச அரிசி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை, 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு, 'ஆவாஸ் யோஜனா' திட்டத்தில் வழங்கப்படும் வீடுகளில், தமிழகத்திற்கு மட்டும், 11 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வி.கே.சிங் பேசினார்.

