ADDED : பிப் 25, 2024 02:10 AM
சென்னை:தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி, எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம், 4,920 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக, 300 நாட்களுக்கு மேல், சூரிய வெளிச்சம் அதிகம் இருக்கும் மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. இதனால், நம் மாநிலத்தில், பல்வேறு நிறுவனங்களும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, 1 மெகா வாட்டிற்கு மேல் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் நிலையங்களின் நிறுவு திறன், 6,912 மெகா வாட்டாக உள்ளது. அதில், 40 சதவீதம் மின் வாரியத்திற்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர, கட்டடங்களில் மேல் அமைக்கப்பட்ட மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களின் நிறுவு திறன், 449 மெகா வாட்டாக உள்ளது. விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு உள்ள சூரியசக்தி மின் நிறுவு திறன், 65 மெகா வாட் என, ஒட்டு மொத்தமாக, 7,426 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன.
அவற்றில் தினமும் சராசரியாக, 2,500 - 3,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. கடந்த, 2023 ஆக., 3ல் சூரியசக்தி மின் உற்பத்தி, 4,882 மெகாவாட்டாக இருந்தது. இதுவரை, உச்ச அளவாக இருந்தது.
இந்நிலையில், எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம் சூரியசக்தி மின் உற்பத்தி, 4,920 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

