மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய வகை வண்ணத்துப்பூச்சி
மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய வகை வண்ணத்துப்பூச்சி
ADDED : ஜன 13, 2024 11:16 PM

சென்னை:மேற்கு தொடர்ச்சி மலையில், 33 ஆண்டுகளுக்கு பின், 'கிளவுட் பாரஸ்ட் சில்வர்லைன்' என்ற புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் உள்ள, மேகமலை கோட்டத்தில், 'கிளவுட் பாரஸ்ட் சில்வர்லைன்' என்ற புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது, மேற்கு தொடர்ச்சி மலையில், 33 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும். இந்த இனத்திற்கு, மேகமலை அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளது. மேகமலை என்றால் மேகம், மலை என்று பொருள்படும்.
தேனியை சேர்ந்த வனம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் காலேஷ் சதாசிவம், ராமசாமி காமையா, ராஜ்குமார் ஆகியோர், இந்த வண்ணத்துப்பூச்சி இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இது, 'என்டோமான்' என்ற அறிவியல் ஆய்வு இதழில், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பால், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, வண்ணத்துப்பூச்சி இனங்கள் வகை எண்ணிக்கை, 337 ஆக உயர்ந்துள்ளது.
முதன்மை தலைமை வனவிலங்கு பாதுகாப்பாளர் சீனிவாசரெட்டி, துணை இயக்குனர் ஆனந்த், கள இயக்குனர் பத்மாவதே ஆகியோர் உதவியுடன், ஆய்வாளர்கள் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

