தமிழக போலீசில் தொழில் பாதுகாப்பு படை புதிய பிரிவை ஏற்படுத்த திடீர் கோரிக்கை
தமிழக போலீசில் தொழில் பாதுகாப்பு படை புதிய பிரிவை ஏற்படுத்த திடீர் கோரிக்கை
ADDED : ஜன 13, 2024 11:14 PM
சி.எஸ்.ஐ.எப்., என்ற, மத்திய தொழிலக பாதுகாப்பு படை போன்ற பிரிவை, தமிழக காவல் துறையிலும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சி.ஐ.எஸ்.எப்., மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு படைப்பிரிவு. முக்கிய தொழில் நிறுவனங்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட இந்தப் பிரிவு, நிபுணத்துவம் வாய்ந்த துணை ராணுவப்படையாகும்.
இந்த படை தான் அணுமின் நிலையங்கள், விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், டில்லி மெட்ரோ போன்ற முக்கியத்துவம் வாய்ந்த, 358 பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
இதேபோன்ற ஒரு தொழிலக பாதுகாப்பு படைப்பிரிவை தமிழக காவல் துறையிலும் ஏற்படுத்தி, தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, தனியார் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வடசென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து, சமீபத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது, தொழிலக பாதுகாப்பு படை பிரிவு இருந்திருந்தால், பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று கூறப்படுகிறது.
இது குறித்து, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
சி.எஸ்.ஐ.எப்., படைப்பிரிவினர், தொழிற்சாலை பாதுகாப்பின் அனைத்து பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள். இது, ஒரு துணை ராணுவ படை. அதாவது அனைத்து துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களே, இதில் உள்ளனர்.
அவர்கள் எந்த அசாதாரண சூழலையும் எதிர்கொண்டு, மக்களை காக்கக்கூடிய தகுதி படைத்தவர்கள்.
அதனால் தான், பெரும்பாலான பெரிய பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அணுமின் நிலையம், விமான நிலையம் போன்ற எந்நேரமும் பாதுகாப்பு தேவைப்படும் அதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசாகப்பட்டினம் ஸ்டீல் நிறுவனத்தில், 2012ல் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அதில் களம் இறங்கி மக்களைக் காத்தவர்கள் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள். அவர்கள் செயல்பாட்டால், பெரும் சேதம் தடுத்து நிறுத்தப்பட்டது.
தற்போது தமிழகத்தில், இதுபோன்ற தொழிற்சாலை பாதுகாப்பில் நிபுணத்துவம் வாய்ந்த பாதுகாப்பு படைப்பிரிவை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், சென்னை எண்ணுாரில் உள்ள கோரமண்டல் நிறுவனத்தில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டனர். இது போன்ற சமயங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை, சி.எஸ்,ஐ.எப்., வீரர்கள் நன்றாக தெரிந்து வைத்திருப்பர்.
சமீப காலங்களில் தொழிற் சாலைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால், பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படுகிறது.
போதிய அனுபவம் இல்லாத பாதுகாவலர்களால், தீயை அணைத்து, தொழிலாளர்களையும், தொழிற்சாலையையும் காக்க முடியவில்லை. தீயணைப்பு துறையினரை தான் நாட வேண்டி உள்ளது. இதனால், ஏற்படும் கால தாமதத்தால் உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்படுகிறது.
சமீபத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர். அதில் பல நாட்டினரும் தமிழகத்தில் தொழில் துவங்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு உள்ளனர்.
இவ்வேளையில் சர்வதேச தரம் வாய்ந்த தொழிற்சாலை பாதுகாப்பு படை பிரிவை தமிழ்நாடு காவல்துறை தலைமையின் கீழ் அமைத்து, தொழில் நிறுவனங்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இதன் வாயிலாக தொழிற்சாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அதோடு, தமிழக காவல் துறை வருமானமும் ஈட்டலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

