ADDED : செப் 26, 2025 01:31 AM
சென்னை:சென்னையை தொடர்ந்து, மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் வேளாண் வணிக திருவிழா நடத்தப்பட உள்ளது.
மாவட்டங்களில் வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடந்து வருகிறது.
இப்பொருட்கள் குறித்து, நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அறிந்து கொள்ளவும், சிறுதானிய உணவுகள் உள்ளிட்ட பொருட்களை உணவில் சேர்ப்பதை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரித்தால், விவசாயிகள் வருவாய் அதிகரிக்கும்.
இதை கருத்தில் வைத்து, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், நாளை மற்றும் நாளை மறுதினம், வேளாண் வணிக திருவிழாவிற்கு வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதை தொடர்ந்து, ஜனவரி மாதம், மதுரை மற்றும் திருநெல்வேலியில் வணிக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.