ADDED : ஜன 13, 2024 10:49 PM
சென்னை:சென்னையில் இருந்து துாத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில், கடந்த இரண்டு நாட்களாகவே பயணியர் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால், உள்நாட்டு விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:
ரயில்களில் டிக்கெட் கிடைக்காததால், சற்று கூடுதல் கட்டணமானாலும் விமானங்களில் பயணிக்க வந்தோம். ஆனால், இங்கு பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்ல, சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
விமானங்களில் தேவையை அடிப்படையாக கொண்டே, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, மூன்று மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், கட்டணம் குறைவாக இருக்கும்.
சிறப்பு விமானங்களை உடனடியாக இயக்க முடியாது. அனுமதி பெற குறைந்தது, மூன்று மாதங்கள் ஆகி விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

