ADDED : ஜன 23, 2024 05:28 AM
சென்னை, ஜன. 23-
மூன்று கோவில்களில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானியம்மன் கோவில்; விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி கோவில்; கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆகியவற்றில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
தற்போது எட்டு கோவில்களில், நாள் முழுதும் அன்னதானம்; 756 கோவில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும், 105 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர் மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளீதரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

