பாலத்தில் குண்டு வெடிப்பு: விழுப்புரம் அருகே பயங்கரம்
பாலத்தில் குண்டு வெடிப்பு: விழுப்புரம் அருகே பயங்கரம்
ADDED : ஜன 21, 2024 04:07 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே தென்பெண்ணையாற்று பாலத்தில் வெடிகுண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த சின்னகள்ளிப்பட்டு தென்பெண்ணையாற்றில் நேற்று முன்தினம் ஆற்று திருவிழா நடந்தது. காலை முதல் மாலை வரை ஏராளமான மக்கள் ஆற்றுத் திருவிழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில், இரவு 11:00 மணிக்கு மேல் அங்குள்ள ஆற்று பாலத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தினர்.
அதில், ஒருவர் சின்னகள்ளிப்பட்டு சர்வீஸ் சாலைக்கு செல்லும் வழியில் மேம்பாலம் ஓரம் கைப்பிடி சுவர் அருகே வீசிய கையெறி நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது.
உடன் மது அருந்திய அனைவரும் தப்பியோடினர். இரவு நேரத்தில் அப்பகுதியில் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்த வளவனுார் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், நாட்டு வெடிகுண்டு வீசியவர் சின்னகள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் பன்னீர்செல்வம் (எ) சந்திரன், 29; எலக்ட்ரீஷியன் என்பதும், திருவிழா தருணங்களில் வெடிக்காத வாணவெடிகளில் இருந்து மருந்துகளை எடுத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்த, பன்னீர்செல்வத்தை நேற்று இரவு கைது செய்தனர்.

