ADDED : பிப் 02, 2024 12:09 AM

நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. சரக்கு ரயில் போக்குவரத்துக்கு பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும் என்பது, நாட்டின் கடைக்கோடி வரை பொருட்களை அனுப்பிவைக்க ஏதுவாக இருக்கும். இது, தொழில் வளர்ச்சிக்கு குறிப்பாக கோவைக்கு பயனுள்ளதாக அமையும்.
- செந்தில் கணேஷ்,
தலைவர், இந்திய தொழில் கூட்டமைப்பு
இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஆனால், குறு, சிறு, நடுத்தர தொழில் துறைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை. எந்த சலுகையும் அறிவிக்கவில்லை.
------ மாரியப்பன்,
தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க முன்னாள் தலைவர்
குறு, சிறு தொழில்களுக்கு எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, வங்கி கடன், குறு, சிறு தொழில்களுக்கு 5 சதவீதத்தில் வட்டி குறைப்பு, 'சர்பாஸ்' சட்டத்தின் மேல் நடவடிக்கை எடுக்க, ஆறு மாதம் நீட்டிப்பு உட்பட, எவ்வித எதிர்பார்ப்பும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.
- ஜே.ஜேம்ஸ்,
தலைவர், தமிழக கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் -
சிறு, குறு உணவு துறை மேம்பட, 880 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்கதக்கது.
பி.எம்.அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், மூன்று கோடி பேருக்கு, ஐந்து ஆண்டுகளில் வீடு கட்டி கொடுக்கும் திட்டம் பாராட்டுக்கு உரியது.
- ஏ.சி.மோகன், செயலர், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளனம்
கால்நடை வளர்ப்பதை ஊக்குவிக்க புதிய திட்டங்கள்; யூரியாவை தொடர்ந்து டி.ஏ.பி., உரங்கள் தயாரிப்பிலும், 'நானோ' தொழில்நுட்பம் கொண்டு வருவது, சரக்கு போக்குவரத்துக்கு சிறப்பு வழித்தடங்கள், மின்சார வாகனங்களுக்கு, 'சார்ஜிங் ஸ்டேஷன்' அமைப்பது போன்றவற்றை வரவேற்கிறோம்.
- எஸ்.பி.ஜெயப்பிரகாசம்,
தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர்
கிராமப்புற பகுதிகளுக்கான வீடு திட்டத்தில், கூடுதலாக இரண்டு கோடி வீடுகள் கட்டப்படும் என்றும், நடுத்தர வருவாய் பிரிவு மக்கள், வீடு வாங்கும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரின் வீட்டுவசதி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
-- எஸ்.ஸ்ரீதரன்,
ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்க கூட்டமைப்பான 'கிரெடாய்'யின் தேசிய துணை தலைவர்
இடைக்கால பட்ஜெட்டில், அரசு நிர்வாக செலவுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் இருக்குமேயொழிய, பெரிய திட்டங்களை அறிவிப்பது மரபாக இருந்ததில்லை. அந்த மரபுகளை மீறுகிற வகையில், லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, சில கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்
புத்தாக்க ஆராய்ச்சி திட்டங்களுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம், சூரிய ஒளி மின்சார கட்டமைப்பு அமைக்கும் குடியிருப்புகளுக்கு, 300 யூனிட் இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
-- வைகோ, ம.தி.மு.க., பொதுச்செயலர்
சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் ஆகியவை, மத்திய அரசின் தாரக மந்திரம் என்பதால், அதை உறுதி செய்யும் வகையில், வளமான மாநிலங்கள், வலிமையான பாரதம் அமைய, இந்த இடைக்கால பட்ஜெட் பயன் தரட்டும்.
-- வாசன், த.மா.கா., தலைவர்
கானல் நீர் காட்டி தாகம் தீர்க்கும் தண்ணீர் இருப்பதாகக் கூறும் இடைக்கால நிதிநிலை அறிக்கை இது. வழக்கம்போல் ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கும், சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கும் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.
- முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர்

