ADDED : ஜன 21, 2024 02:21 AM
சென்னை : வணிக உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில், மாற்றம் செய்ய வேண்டும் என, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில், வணிகர்கள் வலியுறுத்தினர்.
தமிழக அரசு பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்தில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர், வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:
அரசு பணியாளர்களுக்கு இணையாக குடும்பநல நிதி, காப்பீடு, பேரிடர் வெள்ள நல நிதி போன்றவற்றை வணிகர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். வணிக உரிமங்கள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுவதை மாற்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வகை செய்ய வேண்டும்.
வணிகர்களை தாக்கும் சமூக விரோதிகள், ஜாமினில் வர முடியாதபடி சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைச்சர்களிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

