'ஜாதி, மதம் அற்றவர்' என சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட்
'ஜாதி, மதம் அற்றவர்' என சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட்
ADDED : பிப் 02, 2024 02:25 AM

சென்னை: அரசு உத்தரவு, விதிகள் எதுவும் இன்றி, தங்கள் விருப்பப்படி சான்றிதழ்களை தாசில்தார்கள் வழங்க முடியாது எனவும், 'ஜாதி, மதம் அற்றவர்' என சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஜாதி இல்லை; மதம் இல்லை' என, தனக்கு சான்றிதழ் வழங்க கோரிய மனுவை, தாசில்தார் மற்றும் கலெக்டர் பரிசீலிக்க உத்தரவிடும்படி கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
ஜாதி இல்லை, மதம் இல்லை என சான்றிதழ் பெற, மனுதாரர் விரும்புவது பாராட்டத்தக்கது; ஆனால், அத்தகைய சான்றிதழ் வழங்க, அரசு அதிகாரம் வழங்காத போது, தாசில்தாரால் அப்படி ஒரு சான்றிதழை வழங்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
தாசில்தாருக்கு அதிகாரம் வழங்கப்படாத போது, சான்றிதழ் வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் பிளீடர் வடிவேலு தீனதயாளன், 'ஜாதி இல்லை; மதம் இல்லை என ஒருவருக்கு சான்றிதழ் வழங்க, தாசில்தார்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
அரசு உத்தரவுப்படி, பட்டியலிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கவே, தாசில்தார்களுக்கு அதிகாரம் உள் ளது. கடந்த 1973ல் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவில், தங்கள் ஜாதி, மதம் பற்றி குறிப்பிடுவது, அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று கூறப்பட்டுள்ளது.
மாற்று சான்றிதழ், பள்ளி சான்றிதழில், அதற்குரிய பகுதியை வெற்றிடமாக விட்டு விடலாம். அவ்வாறு வெற்றிடமாக விட்டு விட, தனி மனிதனுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது, ஜாதி, மதம் பெயரை குறிப்பிடுவதற்கும், வெற்றிடமாக விட்டு விடுவதற்கும் சுதந்திரம் உள்ளது. அதை, அதிகாரிகள் கேள்வி கேட்க முடியாது.
அதன்படி, பள்ளி சான்றிதழில் ஜாதி, மதத்தை ஒருவர் குறிப்பிடாமல் இருக்கலாம்; ஆனால், ஜாதி,, மதம் அற்றவர் என்பதற்கான சான்றிதழ் வழங்கும்படி, வருவாய் அதிகாரிகளை அவர் வலியுறுத்த முடியாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

