முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வு தள்ளி வைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வு தள்ளி வைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : செப் 19, 2025 02:07 AM
சென்னை:முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை தள்ளிவைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வு, அக்., 12ம் தேதி நடக்க உள்ளது.
இந்த தேர்வை நவம்பருக்கு தள்ளி வைக்கக்கோரி, திருச்சி மாவட்டம் நாகையநல்லுார் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.கதிரேசன் ஆஜராகி, ''புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ப, தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் வழங்கவில்லை எனில், மன உளைச்சல் ஏற்படும்,'' என்றார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.

