கழிப்பறையை நோக்கி கேமரா பொருத்திய வழக்கு: போலீஸ் இறுதி அறிக்கை ரத்து
கழிப்பறையை நோக்கி கேமரா பொருத்திய வழக்கு: போலீஸ் இறுதி அறிக்கை ரத்து
ADDED : பிப் 25, 2024 01:14 AM
சென்னை:கோவையை சேர்ந்தவர் எஸ்.லட்சுமிபதி; தன் நிறுவன வளாகத்தில் உள்ள, பெண்களுக்கான கழிப்பறையை நோக்கி சிலர் 'சிசிடிவி' கேமரா பொருத்தியிருப்பதாக, ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, இருவருக்கு எதிராக இறுதி அறிக்கையை கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 2021 ஜூனில், விசாரணைக்காக வழக்கு எடுக்கப்பட்டது.
விசாரணை அதிகாரி
இந்நிலையில், மேல் விசாரணைக்காக இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, தாமாக டி.ஜி.பி., உத்தரவுபிறப்பித்தார். புலன் விசாரணை அதிகாரியையும் நியமித்தார். இதை எதிர்த்து, லட்சுமிபதி வழக்கு தொடர்ந்தார். வழக்கை ரத்து செய்யக்கோரி, குற்றம் சாட்டப்பட்டவர்களும், மனுத்தாக்கல் செய்தனர். இரண்டு மனுக்களையும், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தவறுதலான வழக்கு எனக்கூறி வழக்கை முடித்து வைத்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., தாக்கல் செய்தது.
இந்த இறுதி அறிக்கையை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில், லட்சுமிபதி தாக்கல் செய்த மனு:
அதிகாரிகளுடன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கை கோர்த்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி விசாரணை நடத்த, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, மேல் விசாரணைக்கு நீதிமன்றம் தான் உத்தரவிட முடியும்.
ஏற்கனவே, இறுதி அறிக்கையை ரேஸ் கோர்ஸ் போலீசார் தாக்கல் செய்து விட்டனர்.
எனவே, மேல் விசாரணைக்கு எந்த போலீஸ் அதிகாரியும் உத்தரவிட முடியாது. இருந்தும், சி.பி.சி.ஐ.டி., மேல் விசாரணை நடத்தி, முதல்தகவல் அறிக்கையை முடித்து வைத்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:
மேல் விசாரணைக்கு, புதிய விசாரணைக்கு, மறு விசாரணைக்கு உத்தரவிட, நீதிமன்றங்களுக்கு தான் அதிகாரவரம்பு உள்ளது.
புதிதாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட, டி.ஜி.பி.,க்கு அதிகாரம் இல்லை.
புலன் விசாரணையை மாற்றி, மேல் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தாலும், புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, புதிதாக விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., நடத்தி உள்ளது. அதே சாட்சிகளை விசாரித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.
இறுதி அறிக்கையை குறிப்பிடாமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலோ, புகார்தாரர் தரப்பிலோ எந்த கோரிக்கையும் இல்லாமல், வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, மேல் விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டிருப்பதை பார்க்கும் போது, அதிர்ச்சி அளிக்கிறது. போலீஸ் அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உள்ள செல்வாக்கை, இது காட்டுகிறது.
மேல் விசாரணைக்கு சி.பி.சி.ஐ.டி., அனுமதி கோரியதை, விசாரணை நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.
அதன்பின்னும், புதிதாக வழக்குப் பதிவு செய்து, புதிதாக விசாரணை நடத்தும் அளவுக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு துணிச்சல் இருந்துள்ளது. புதிதாக எந்த ஆதாரமும் இல்லாமல், மேல் விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டிருக்கக் கூடாது. புலன் விசாரணையை மாற்றி, தாமாக முன்வந்து மேல் விசாரணைக்கு உத்தரவிட, டி.ஜி.பி.,யை யார் வற்புறுத்தினார் என்பது, மில்லியன் டாலர் கேள்வி.
விளையாடியுள்ளனர்
புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, மீண்டும் விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., நடத்தியிருக்கக் கூடாது. டி.ஜி.பி.,யும், கோவை சி.பி.சி.ஐ.டி.,யும் நீதிமன்றத்துடன் விளையாடிஉள்ளனர்.
மேல் விசாரணை கோரியதை நீதிமன்றம் நிராகரித்திருக்கும் போது, புதிதாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, புதிதாக விசாரணையை சி.பி.சி.ஐ.டி., நடத்தியிருக்கக் கூடாது.
எனவே, டி.ஜி.பி.,யின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. அதனால், புதிதாக வழக்குப் பதிவு செய்து, புதிதாக விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ததும், ரத்து செய்யப்படுகிறது.
ரேஸ் கோர்ஸ் போலீசார் தாக்கல் செய்த இறுதி அறிக்கையின் அடிப்படையில், மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க, விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

