கவர்னர் மாளிகை மீது குண்டு வீச்சு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
கவர்னர் மாளிகை மீது குண்டு வீச்சு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : ஜன 21, 2024 02:27 AM
சென்னை : கவர்னர் மாளிகை மீது குண்டு வீசிய விவகாரத்தில், கருக்கா வினோத் மீது, 680 பக்க குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கவர்னரின் அதிகாரத்தில் தலையீடுதல் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை, நந்தனம் எம்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத், கடந்தாண்டு அக்., 25ம் தேதி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசினார்.
விசாரணை
கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இவர், மற்றொரு வழக்கில் சிறையில் இருந்தபோது, பி.எப்.ஐ., என்ற 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பினருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
அந்த அமைப்பினர் உதவியோல், அவர் ஜாமினில் வெளியே வந்து, கவர்னர் மாளிகை முன், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
பயங்கரவாத அமைப்புகளுடன், கருக்கா வினோதுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,க்கு வழக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
கூடுதல் பிரிவு
இந்நிலையில், கருக்கா வினோத் மீது, பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில், 680 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, என்.ஐ.ஏ., நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில். ஏற்கனவே வெடி விபத்து ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், வெடிபொருள் தடை சட்டம், பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு இருந்தன.
தற்போது, ஜனாதிபதி, மாநில கவனர்களின் அதிகாரங்களில் தலையிடுதல், துாண்டுதல், கட்டாயப்படுத்துதல், தாக்குதல், முறையின்றி தடுத்தல், குற்ற வழிகளால் தடுத்தல் உள்ளிட்ட, இந்திய தண்டனை சட்டம் 124வது பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

