பிராமணர்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முதல்வர் அழைத்து பேசணும்: அர்ஜுன் சம்பத்
பிராமணர்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முதல்வர் அழைத்து பேசணும்: அர்ஜுன் சம்பத்
ADDED : மார் 24, 2025 05:30 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிராமணர், அர்ச்சகர், வைதீகர்கள் மற்றும் ஹிந்து மக்கள் கட்சி சார்பில், அந்தணர் பாதுகாப்பு பேரணி மாநாடு நடந்தது. அதில், பிராமணர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஹிந்து பிரமுகர்கள் பலரும் பேசினர்.
தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலத் தலைவர் பிரம்மஸ்ரீ ஹரிஹரமுத்து: தமிழ் கலாசாரத்தை அறமும் நெறியுமாக பாதுகாக்கும் பிராமண சமூகத்தின் மீது அநீதிகள் இழைக்கப்படுகின்றன. நம் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. அந்த கொடுமையை திராவிடமே செய்கிறது.
அதனால், அநீதிகளை எதிர்கொள்ள பிராமணர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிராமணர் அடையாளங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு உறுதியான பதில் அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நல பொதுச்செயலர் பால சடாச்சரம்: அர்ச்சகர்கள் இறை பணியில் ஜாதி, மதம், இனம் என்ற வேறுபாடு பார்ப்பவர்கள் அல்ல. எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. ஆனால், இன்றுள்ள நிலையில் சனாதன தர்மம், கோவில்கள், ஆகமங்கள், அர்ச்சகர்கள், அந்தணர் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
திரைப்பட இயக்குநர் மோகன்ஜி: தர்மம் காப்பது சத்திரியன் லட்சணம் என்பர். ஒரு சில ஜாதிகளை குறிப்பிட்டு பேசினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், பிராமணர்களை இழிவுப்படுத்தி பேசுகின்றனர்.
இந்நிலை மாறிட பிராமணர்கள், ஈரோட்டில் இது போன்ற மாநாடுகளை நடத்த வேண்டும். பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சனாதனம் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.
திரைப்பட நடிகை கஸ்துாரி: பிராமண சமூகம் தனியாக இல்லை. திராவிட மாடல் ஆட்சியில் தான், பிராமணர்களுக்கு அதிகபட்ச சங்கடங்கள் ஏற்படுகின்றன. இனி, பிராமணர்களை இழிவாக பேசினால் புகார் கொடுக்க வேண்டும்.
ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்: எந்த ஒரு கட்சிக்கும் எதிர்த்து நடத்தப்படும் மாநாடு அல்ல இது. அந்தணர் ஒற்றுமை ஆங்காங்கே உருவாகி வருகிறது. ஏழைக்கான இடஒதுக்கீடு நாடு முழுவதும் 10 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏழைக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை.
பிராமண சமூகம் அமைதியான நாகரியமான சமூகம்; ஜாதி சண்டை, கலவரத்தில் ஈடுபட்டதில்லை. சுதந்திர போராட்டம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல நல்ல காரியங்களை, பிராமணர் சமூகம் செய்துள்ளது. ஆனால், பிராமணர் மீது திராவிட கும்பல் வெறுப்பு பிரசாரத்தை செய்கிறது.
அந்தணர் சமூகத்தை இழிவுப்படுத்தி பேசுவது தி.மு.க., அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தான். அதை முதல்வர் கண்டிக்கவில்லை. கோவில்களை, ஹிந்து சமயத்தில் இருந்து பிரிக்க வேண்டும்; கோவில்களில் இருந்து சிவாச்சாரியார்களை வெளியேற்ற வேண்டும் என்பது அமைச்சர் சேகர்பாபுவின் திட்டம். இப்பிரச்னைகளை முதல்வர் தான் தீர்க்க வேண்டும். அதற்காக பிராமணர்களை அழைத்து பேச வேண்டும். எங்கள் குறைகளை கேட்காவிட்டால் தொடர்ந்து போராடுவோம்.