பிறவியில் காது கேளாமை; தமிழகத்தில் பாதிப்பு அதிகம்
பிறவியில் காது கேளாமை; தமிழகத்தில் பாதிப்பு அதிகம்
ADDED : ஜன 21, 2024 03:09 AM
சென்னை : ''தமிழகத்தில் 1,000க்கு ஆறு குழந்தைகள், பிறவியிலேயே காது கேளாமையால் பாதிக்கப்படுகின்றன,'' என, காது, மூக்கு, தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்து வரும் பன்னாட்டு மருத்துவ மாநாட்டில், டாக்டர் மோகன் காமேஸ்வரன் பேசியதாவது:
உடல் குறைபாடுகள் விகிதத்தை பொறுத்தவரை, உலக அளவிலும், இந்தியா அளவிலும் காது கேளாமை பாதிப்பு, இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகம் முழுதும், 63 கோடி பேர் செவித்திறன் குறைபாட்டுடன் உள்ளனர்.
வரும் 2050ம் ஆண்டில், இந்த பாதிப்பு 90 கோடியாக உயரக்கூடும்.
இந்தியாவை பொறுத்தவரை, 1,000 குழந்தைகளில் இரண்டு பேருக்கு பிறவி செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் அந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. உலக அளவில் பிறவி காது கேளாமை பாதிப்பு விகிதத்தை விட, தமிழகத்தில் ஆறு மடங்கு அதிகம்.
இதற்கு முக்கிய காரணம், நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் செய்வது தான்; அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அவற்றை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்.
பிறவி குறைபாடு குழந்தைகளுக்கு, செவித்திறன் கருவிகள் பொருத்தப்படுகின்றன. அவற்றில் பயன் கிடைக்காவிட்டால், 'காக்ளியர் இம்ப்ளான்ட்' என்ற செவி மடு சுருள் கருவி, அறுவை சிகிச்சை வாயிலாக பொருத்தப்படுகிறது.
அதற்கு பின், பேச்சு, மொழித்திறன் பயிற்சிகள் தொடர்ந்து வழங்குவது அவசியம். அந்த வகையில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, காக்ளியர் இம்ப்ளான்ட் சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

