'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங்
'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங்
ADDED : செப் 19, 2025 03:09 AM
சென்னை:தமிழக மருத்துவ கல்லுாரிகளில் காலியாக உள்ள, 40 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ படிப்புகளுக்கான இடங்களுக்கு, நான்கு வாரங்களில் கூடுதல் கலந்தாய்வு நடத்த, மருத்துவ கவுன்சிலிங் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும் அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவ படிப்புகளுக்கு, 2024 - 25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு கட்டங்களாக கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
கவுன்சிலிங்கிற்கு பின், நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் உள்ள 5,000 இடங்களில், 600 இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சிலிங்கில் தேர்வானவர்கள், படிப்பில் சேராமல் கைவிட்ட காரணத்தால், இந்த காலியிடங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், இந்த இடங்களுக்கு கூடுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவிட கோரியும், தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள் அஜிதா, பிரீத்தி, நவநீதம் ஆகியோர் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுவில், 'கவுன்சிலிங்கில் இடம் ஒதுக்கீடு பெற்றவர்கள், படிப்பில் சேராததால், தமிழகத்தில் மட்டும், 40 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை, கவுன்சிலிங்கில் தேர்வாகாத மாணவர்களுக்கு கூடுதல் கவுன்சிலிங் நடத்தி நிரப்பாவிட்டால், மதிப்புமிக்க மருத்துவ படிப்பு இடங்கள் வீணாகும்.
அகில இந்திய அளவில் காலியிடங்களுக்கான கவுன்சிலிங் நடத்தும் வகையில், இந்த இடங்களை மத்திய மருத்துவ கவுன்சிலிங் குழுவில் சேர்க்க உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழகத்தில் காலியாக உள்ள, 40 மருத்துவ படிப்பு இடங்களுக்கும், நான்கு வாரங்களில் கூடுதல் கவுன்சிலிங் நடத்த, மத்திய மருத்துவ கவுன்சிலிங் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

