ADDED : ஜன 13, 2024 08:16 PM
சென்னை:'ஆவின் பால் கொள்முதல் ஊக்கத்தொகையை உயர்த்தியதற்கு, அரசாணையை வெளியிடாதது ஏன்?' என, தமிழக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
பால் உற்பத்தியாளர்களுக்கு, 2023 டிசம்பர் 18ல், லிட்டருக்கு, 3 ரூபாய் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. இது, ஊக்கத்தொகையே தவிர, ஆளும்கட்சியினர் கூறுவது போல கொள்முதல் விலை அல்ல.
இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு எந்த நேரத்திலும் திரும்ப பெறப்படலாம் என்பதால், அதை கொள்முதல் விலை உயர்வாக அறிவிக்கவும்; ஊக்கத்தொகையை பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
குறைந்த கொழுப்பு சத்து உடைய பாலுக்கு, முழுமையான ஊக்கத்தொகை வழங்குவது இல்லை. ஆவின் அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என்பதை உணர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதமாகியும், அதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, பால் உற்பத்தியாளர்களை ஏமாற்றாமல், ஊக்கத்தொகை அறிவிப்பு குறித்த அரசாணையை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

