உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா ?...வதந்தி! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு !
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா ?...வதந்தி! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு !
ADDED : ஜன 13, 2024 08:13 PM
சென்னை:தி.மு.க., அமைச்சரவையில், முதல்வருக்கு அடுத்த நிலையில் உதயநிதி அமரப் போகிறார் என்றும், அவருக்கு துணை முதல்வர் பதவி தரப்படப் போவதாகவும், ஆளும் வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பரவி வரும் தகவல்களை, முதல்வர் ஸ்டாலின் மறுத்துள்ளார். 'அதெல்லாமே வதந்தி' என, திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா நடிகராக இருந்தபோது, 'அரசியலுக்கு எப்போது வருவீர்கள்?' என்ற கேள்வியை அடிக்கடி சந்தித்த உதயநிதி, 'வரவே போவதில்லை' என்றார்; ஓரிரு மாதங்களில், அதை பொய்யாக்கியவருக்கு, தி.மு.க.,வில் முக்கியத்துவம் வாய்ந்த இளைஞர் அணி செயலர் பதவி தரப்பட்டது.
பின்னரும் நடிப்பை விடாதவருக்கு, தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டு, எம்.எல்.ஏ.,வாக்கப்பட்டார்.
ஆளும் கட்சியின் அடுத்த வாரிசாக பார்க்கப்பட்டவரை நோக்கி எழுந்த கேள்விகள் எல்லாமே, 'எப்போது அமைச்சராவீர்கள்?' என்பதாகத்தான் இருந்தது. 'என்னை விட சீனியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்' என்றெல்லாம் கூறி, வழக்கம்போல் மறுத்தவர் தலையை, சில மாதங்களிலேயே அமைச்சர் பதவி அலங்கரித்தது.
அதன் பின்னரும் அவரை விடாமல் துரத்திய கேள்விகளும், பேச்சுகளும், விரைவில் துணை முதல்வராகப் போகிறார் என்பதாகத்தான் இருந்தது. அதற்கான காரணமும் சூழலும் சரியாக சொல்லப்பட்டதால், அவரது கட்சியினரால் கூட மறுக்க முடியாமல் போனது.
இம்மாதம் இறுதியில், முதல்வர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளார். அதற்கு முன்னரே, உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது என்றும், அதை வலியுறுத்தி, சேலம் இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றும், ஆளும் கட்சி வட்டாரத்தில் பேச்சு பலமாக அடிபட்டது.
எப்போதும்போல் அதை நிராகரித்த உதயநிதி, 'இதில் முடிவு எடுக்க வேண்டியவர் முதல்வர் தான்' என்கிற ரீதியில் பதிலளித்திருந்தார்.
அதனால், துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்கப் போகும் நாள் கூட குறிக்கப்பட்டதாகவும், வரும் 25ல் தைப்பூச நன்னாளில், அவர் பதவியேற்கப் போவதாகவும் தகவல்கள் பரவின. அதே வேகத்தில், இம்முடிவை கட்சியின் மூத்த நிர்வாகிகளும், மூத்த அமைச்சர்களும் விரும்பவில்லை என்ற தகவலும் போட்டி போட்டு பரவியது.
இந்த சூழலில், 'அதெல்லாம் வெறும் வதந்தி' எனச் சொல்லி, இப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முதல்வர்.
இது தொடர்பாக, கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
இம்மாதம் 21ம் தேதி சேலத்தில் நடக்கும், இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகிற, 'மாநில உரிமை மீட்பு' முழக்கம், டில்லி வரை அதிரட்டும்; 'நாற்பதும் நமதே, நாடும் நமதே' என்ற நம் இலக்கை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.
மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழகம் முழுதும் இளைஞர்கள், பெரும் ஆர்வத்துடன், திரண்டு வரத் தயாராகி உள்ள நிலையில், வதந்திகளையே செய்திகளாக பரப்பி, வாழ்க்கை பிழைப்பு நடத்தி, வயிறு வளர்க்கக் கூடியவர்கள், என் உடல்நிலை குறித்து, பொய் தகவல்களை பரப்பி பார்த்தனர்.
நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன் என, அயலக தமிழர் தின விழாவில் தெரிவித்தேன். ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது என்ற வதந்தியை பரப்பத் துவங்கினர்.
அதற்கு இளைஞர் அணி செயலரான, அமைச்சர் உதயநிதி, 'எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்' எனப் பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்து விட்டார்.
வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில், அதுவே முதன்மை செய்தியாகட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

