ஜெயலலிதா இல்லத்துக்கான தொகையில் வரி செலுத்த எதிர்த்த மனு முடித்துவைப்பு
ஜெயலலிதா இல்லத்துக்கான தொகையில் வரி செலுத்த எதிர்த்த மனு முடித்துவைப்பு
ADDED : ஜன 21, 2024 03:56 AM
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த, அரசு செலுத்திய இழப்பீட்டு தொகை திருப்பி கொடுக்கப்பட்டு விட்டதால், வருமான வரி பாக்கி செலுத்த தடை கேட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள 'வேதா' இல்லத்தில் ஜெயலலிதா வசித்தார். அவரது மறைவுக்குப் பின், வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற, தமிழக அரசு 2020 ஜூலையில் உத்தரவு பிறப்பித்தது.
69 கோடி ரூபாய்
இல்லத்துக்கான இழப்பீட்டு தொகையாக 69 கோடி ரூபாயை, சென்னை சிவில் நீதிமன்றத்தில் அரசு செலுத்தியது. இதையடுத்து, ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கியை வசூலிக்க, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியாக 36.87 கோடி ரூபாயை, அரசு செலுத்திய இழப்பீட்டு தொகையில் இருந்து எடுப்பதற்கு வருமான வரித்துறைக்கு தடை கோரி, ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
ரத்து
அரசு தரப்பில் அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, ''வேதா இல்லத்தை கையகப்படுத்தி பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. சிவில் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் செலுத்தப்பட்ட தொகை, வட்டியுடன் சேர்த்து 70.40 கோடி ரூபாயாக திருப்பி அளிக்கப்பட்டு விட்டது,'' என்றார்.
இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டது.

