'கமிஷன்' கேட்கும் மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு
'கமிஷன்' கேட்கும் மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 24, 2025 11:21 PM
சென்னை:முறைகேட்டில் ஈடுபடும் மாவட்ட மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, 'டாஸ்மாக்' நிர்வாகத்தை, பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் கூறியதாவது:
சென்னை உட்பட பல மாவட்டங்களில், மாவட்ட மேலாளர்களாக இருப்பவர்கள், கடை பணியாளர்களை அழைத்து, 'ஒரு பாட்டிலுக்கு, 2 ரூபாய் தர வேண்டும்' என்று கேட்கின்றனர். அதை ஏற்கவில்லை என்றால், விற்பனை குறைந்த கடைகள், கிடங்கிற்கு வேண்டுமென்றே இடமாற்றம் செய்கின்றனர்.
இதுதொடர்பாக, மண்டல முதுநிலை மேலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் தொலைபேசியில் புகார் அளித்தால், எழுத்துப்பூர்வமாக தருமாறு கூறுகின்றனர். அப்படி தந்தால், இருவரும் சேர்ந்து பணியாளர்களை பழிவாங்க வாய்ப்புள்ளது.
எனவே, இந்த முறைகேடு தொடர்பாக, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேசி, தவறு செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.