போதை பொருட்கள் கடத்தல் மாவோயிஸ்ட் கூட்டாளிகளுக்கு வலை
போதை பொருட்கள் கடத்தல் மாவோயிஸ்ட் கூட்டாளிகளுக்கு வலை
ADDED : ஜன 19, 2024 12:44 AM
சென்னை:போதை பொருள் பதுக்கல் வழக்கில் சிக்கிய மாவோயிஸ்ட் கூட்டாளிகளை, ஆந்திர மாநில போலீசார், தமிழகத்தில் தேடி வருகின்றனர்.
ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில், பாடேறு அருகே, ஜின்னகருவு எனும் மலை கிராமத்தில், மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கஞ்சா பயிரிட்டு, மொத்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். அந்த கிராமத்திற்குள், வெளி நபர்கள் எளிதில் நுழைய முடியாது.
கடந்தாண்டு ஜூனில், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், ஆந்திர மாநில போலீசாரும், அப்பகுதிகளில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கூரை வீடு ஒன்றில், 17 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவுடன் பதுங்கி இருந்த மாவோயிஸ்ட் சுந்தர ராவ், 40, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், இவருக்கு கீழ், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் இடைத்தரகர்களாக பெரும் படையே செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஆந்திர மாநில போலீசார், சுந்தரராவ் கூட்டாளிகள், ஐந்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து, அம்மாநில சிறையில் அடைத்து உள்ளனர்.
இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், 'தமிழகத்தைச் சேர்ந்த, ஐந்துக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள், எங்கள் கூட்டத்தில் உள்ளனர். அதில், சென்னை கல்லுாரி ஒன்றின் முன்னாள் மாணவரும் உள்ளார். இவர்கள் வாயிலாக, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு, எங்கள் இயக்கத்திற்கு நிதி திரட்டினோம்' என, கூறியுள்ளனர்.
இதையடுத்து, ஆந்திர மாநில போலீசார், தமிழகத்தில், சென்னை மற்றும் வேலுார் உள்ளிட்ட பகுதிகளில், மாவோயிஸ்ட்களை தேடி வருகின்றனர்.
சென்னை சூளைமேடில், மாணவர்கள் தங்கி இருந்த விடுதி ஒன்றில் சோதனை செய்தனர். அக்கும்பல் பல மாதங்களுக்கு முன் காலி செய்து விட்டு, வேறு இடத்திற்கு சென்றது தெரியவந்துள்ளது.

