மாம்பழ பிரச்னையை திசை திருப்ப முயற்சி; தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
மாம்பழ பிரச்னையை திசை திருப்ப முயற்சி; தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 26, 2025 08:22 AM
ADDED : ஜூன் 26, 2025 04:07 AM

சென்னை: மாம்பழ விலை வீழ்ச்சி பிரச்னையை, மத்திய அரசு மீது திருப்புவதாக, தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தர்மபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்துார், சேலம், வேலுார், மதுரை மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகம்.
இங்கு, 3.60 லட்சம் ஏக்கரில் மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. ஏக்கருக்கு இரண்டு முதல் 2.50 டன் வரை மாம்பழம் உற்பத்தியாவது வழக்கம்.
நடப்பாண்டு ஏக்கருக்கு, 3.50 டன் வரை விளைச்சல் அதிகரித்துள்ளது.
அண்டை மாநிலங்களிலும் விளைச்சல் அதிகம். இதனால், அறுவடை செய்த மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், நாள்தோறும் பல டன் மாம்பழங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஆந்திர மாநிலத்தில், இதேபோன்று பிரச்னை எழுந்த நிலையில், அந்த மாநில அரசு எடுத்த நடவடிக்கையால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். அங்குள்ள மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளில், தமிழக மாம்பழங்கள் கொள்முதல் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தனியார் மாம்பழ கூழ் ஆலைகளை தொடர்ச்சியாக இயங்க செய்து, கொள்முதல் செய்த மாம்பழங்களுக்கு மானியம் வழங்க, ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் மாம்பழ விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் இறங்கியுள்ள நிலையில், பிரச்னையை மத்திய அரசு பக்கம் திருப்பும் முயற்சி நடப்பதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஜே.ஆஞ்சநேயலு கூறியதாவது:
தமிழகத்தில் மாம்பழ விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால், சந்தை தலையீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
'ஒரு டன் மாம்பழத்திற்கு 7766 ரூபாய் என, நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். அதில், மாம்பழ கூழ் ஆலைகள், 5000 ரூபாய் வழங்கியது போக, மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசிடம் இருந்து பதில் வருவதற்குள், மாம்பழ சீசன் முடிந்து விடும். விவசாயிகளும் பெரும் நஷ்டத்தை அடைவர்.
எனவே, இப்போதே சந்தை தலையீட்டு திட்டத்தை செயல்படுத்தி, மாநில அரசு தனது பங்களிப்பை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
மத்திய அரசு மீது பழியை போட்டு காலத்தை கடத்தாமல், விவசாயிகளுக்கு உதவ வேண்டும்இவ்வாறு அவர் கூறினார