சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி
ADDED : பிப் 01, 2024 11:28 PM
மதுரை : சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஜாமின் கோரி தாக்கல் செய்த இன்ஸ்பெக்டர் மனுவை 5வது முறையாக உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020, ஜூன் 19ல் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு போலீஸ் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டுகள் முருகன், சாமிதுரை, போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 9 பேர் மீது சி.பி.ஐ., தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இரு ஆண்டுகளுக்கு மேல் இவ்வழக்கு நடக்கிறது. இந்த வழக்கில் 132 சாட்சிகளில் இதுவரை 49 சாட்சிகளுக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் கோரி 5வது முறையாக மனு தாக்கல் செய்தார். அதில் 'ஏற்கனவே 4 முறை ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வழக்கில் 49 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாட்சிகளான போலீசார் ரேவதி, பியூலா ஆகியோரிடம் விசாரணை முடிந்துவிட்டது. எனக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவாலும் அவதிப்படுகிறேன். வயதை கருத்தில்கொண்டு ஜாமின் வழங்க வேண்டும். நான் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பில்லை. கடைசிக்காலத்தில் என் பேரக்குழந்தைகளோடு நேரம் செலவிட விரும்புகிறேன்' என மனுவில் தெரிவித்துள்ளார்.
இம்மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ., தரப்பில், இந்த வழக்கில் ஒரு சாட்சியிடம் 28 நாட்களுக்கு மேல் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனால் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'எந்த சாட்சியத்திடம் இவ்வளவு நாட்களாக குறுக்கு விசாரணை நடைபெறுகிறது' என கேள்வி எழுப்பினார். அதற்கு, 'மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் குறுக்கு விசாரணை நடப்பதாக' தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, 'மாஜிஸ்திரேட் தன் பணிகளை செய்வாரா இல்லை. தினமும் நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா' எனக்கேள்வி எழுப்பி, ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

